திரைப்பட விழாக்களில் பரிசு, பாராட்டுகளை அள்ளிய திருத்தணி இளைஞரின் குறும்படம்
’புளூ’ குறும்படம், கடந்த டிசம்பர் 5, 6, 7 & 8 ஆகிய 4 நாட்கள் ரஷ்யா அர்கான்ஜெல்ஸ்க் என்ற இடத்தில் நடந்த ஆர்க்டிக் ஓபன் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டது.
தமிழ்நாட்டு இளைஞர் இயக்கிய ’புளூ’ என்னும் குறும்படம், ரஷ்யத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, சிறப்புப் பரிசு அளிக்கப்பட்டுள்ளது.
திருத்தணியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் நாகேந்திரன். இவர் தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக் கழகத்தில் எம்.டெக்., படித்தவர். சிறு வயது முதல் திரைப்பட இயக்குநராக வர வேண்டும் என்பது இவர் கனவு. அதற்கான முயற்சி எடுத்து இவர் இயக்கிய ’புளூ’ என்ற குறும்படம், கடந்த டிசம்பர் 5, 6, 7 & 8 ஆகிய 4 நாட்கள் ரஷ்யா அர்கான்ஜெல்ஸ்க் என்ற இடத்தில் நடந்த ஆர்க்டிக் ஓபன் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதற்காக பிரவீன் குமார் ரஷ்யா சென்று வந்துள்ளார். அந்த விழாவில் பலராலும் பாராட்டப்பட்டு விழாவின் இயக்குநருக்கான சிறப்பு பரிசு அறிவிக்கப்பட்டு பெற்றுள்ளார்.
குறும்படத்தின் கதை என்ன?
’புளூ’ குறும்படம் ஒரு சிறுவனின் கனவுகளையும் அவற்றை அடையும் தீர்மான பயணத்தையும் பற்றிப் பேசுகிறது. குழந்தைகளின் மழலைத் தன்மையையும் இன்னிசையையும் வெளிப்படுத்தும் முயற்சியாக உருவாக்கப்பட்ட படம் என்று இயக்குநர் பிரவீன் குமார் கூறுகிறார்.
கோவா தலைநகரான பனாஜியில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெற்ற மத்திய அரசு நடத்திய இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவில், ’நாளைய படைப்பாளிகளை அடையாளம் காணல்’ என்ற பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 48 மணி நேரத்தில் ஒரு தலைப்பு கொடுத்து திரைப்படம் எடுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு திரைப்படம் எடுத்து அதில் பாராட்டுச் சான்று பெற்றுள்ளார்.
திரைப்பட விழாக்களில் தேர்வு
அதேபோல் இக்குறும்படம் ரஷ்யா திரைப்பட விழா, மதுரை திரைப்படவிழா, சென்னை சாலிகிராமம் திரைப்பட விழா மற்றும் பெங்களூர் திரைப்பட விழாவில் சிறந்த 4 குறும்படங்களில் ஒரு படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு சான்று, ஷீல்டு மற்றும் ரொக்கப் பரிசு அளிக்கப்பட்டது.
இயக்குநர் பிரவீன் குமார், மண்டேலா, மாவீரன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய மடோன் அஸ்வினிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.