Bigg Boss 7 Tamil: தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் அதிகம் கொண்டாடப்பட்ட சீசன் எது ?.. டிஆர்பி சொல்லும் புள்ளி விபரம் இதோ.. !
Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று தொடங்கும் நிலையில் இதுவரை நடந்த 6 சீசன்களின் டிஆர்பி ரேட்டிங் தொடர்பான விவரங்களை காணலாம்.
பொதுவாகவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமில்லாத ரசிகர்கள் உள்ளது என்பது நாம் அறிந்ததே. எப்படி சீரியல்கள் தொடங்கி ரியாலிட்டி ஷோக்கள் வரை ஆண்டுகள் பல கடந்தும் நீங்கா இடம் பிடித்துள்ளதோ அதேபோல் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியும் உள்ளது. இதுவரை 6 சீசன்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முடிந்துள்ள நிலையில் இதில் யார் யார் வின்னர் என்பதை நம்மால் நினைவுப்படுத்தி கூற இயலும்.
அதேசமயம் இந்த 6 சீசன்களிலும் பங்கேற்றவர்களின் பெயர்களையும் நாம் சரியாக கூற இயலும். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 6 சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். இடையில் சில எபிசோட்கள் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க ஒளிபரப்பானது. அதேபோல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் எனப்படும் ஓடிடிக்கான நிகழ்ச்சியை நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்கினார்.
இப்படியான நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7 இன்று முதல் ஒளிபரப்பாகவுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். கிட்டதட்ட பங்கேற்கும் போட்டியாளர்களின் விவரங்களும் வெளியாகி விட்ட நிலையில் இந்த முறை டிஆர்பி எவ்வாறு இருக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
உண்மையில் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இருந்த வரவேற்பே தனி. முதல்முறையாக அதுவும் கமல்ஹாசன் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார் என்றதும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. கமல் எப்படி அதனை பூர்த்தி செய்தாரோ, பங்கேற்ற பிரபலங்களும் மிகச்சரியாக அதனை நிறைவேற்றினர். ஆனால் இது 2வது சீசனில் இருந்து ஏற்றம், இறக்கமாகவே சென்று கொண்டிருக்கிறது.
பிக்பாஸ் டிஆர்பி விவரங்கள்
- முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி 2017 ஆம் ஆண்டு ஜூன் 25 முதல் செப்டம்பர் 30 வரை கிட்டதட்ட 98 நாட்கள் ஒளிபரப்பானது. தொடக்க நிகழ்ச்சி 15.15 என்ற புள்ளிகள் பெற்ற டிஆர்பி இறுதி எபிசோடில் 14.25 ஆக குறைந்தது.
- இரண்டாவது பிக்பாஸ் நிகழ்ச்சி 2018 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் செப்டம்பர் 30 வரை மொத்தம் 105 நாட்கள் ஒளிபரப்பானது. இதில் தொடக்க நிகழ்ச்சி 11.72 ஆக இருந்த டிஆர்பி இறுதியாக 19.25 ஆக எகிறியது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்ற சீசன் இதுதான்.
- 3வது பிக்பாஸ் நிகழ்ச்சி 2019 ஆம் ஆண்டு ஜூன் 23 முதல் அக்டோபர் 6 வரை 105 நாட்கள் நடந்தது. இதில் தொடக்க நிகழ்ச்சி 11.9 ஆக இருந்த டிஆர்பி இறுதியாக 11.05 ஆக குறைந்தது. ஆனால் இந்த சீசன் தான் பொதுமக்களுக்கு மிகவும் பிடித்த சீசன் ஆகும்
- 4வது பிக்பாஸ் நிகழ்ச்சி 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 4 முதல் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 17 வரை 105 நாட்கள் நடந்தது. இந்த சீசனில் தொடக்க நிகழ்ச்சி முந்தைய சீசனை விட 5 புள்ளிகள் அதிகம் பெற்று 16.61 ஆக டிஆர்பி இருந்தது. இறுதியாக முடியும் போது பெரிய அளவில் பாதகம் இல்லாமல் 16.60 ஆக இருந்தது.
- ஐந்தாவது பிக்பாஸ் நிகழ்ச்சி 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 3 முதல் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 16 வரை 105 நாட்கள் நடந்தது. இதில் பிக்பாஸ் சீசனின் தொடக்க நிகழ்ச்சி அதிக டிஆர்பி பெற்றதாக மாறியது. கிட்டதட்ட 18.60 ஆக இருந்த டிஆர்பி இறுதியாக 17.25 ஆக குறைந்தது.
- கடைசியாக நடந்த 6வது சீசன் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 9 முதல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 22 வரை ஒளிபரப்பானது. தொடக்க நிகழ்ச்சி 15.71 டிஆர்பி புள்ளிகளை பெற்ற நிலையில் இறுதியாக கிராண்ட் ஃபைனல் 15.05 புள்ளிகளாக குறைந்தது.
இப்படி ஏற்றம், இறக்கம் கண்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த சீசனில் முந்தைய டிஆர்பியை விட அதிகம் பெறும் எதிர்பார்க்கப்படுகிறது.