Bigg Boss Tamil: ஒவ்வொரு சீசனிலும் ஒருவர்.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குள்ளான போட்டியாளர்கள்..
பிரதீப்பை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டது யார் என்பதை பார்க்கலாம்.
Bigg Boss Tamil: பிரதீப்பை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டது யார் என்பதை பார்க்கலாம்.
கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் ரசிகர்களின் மனம் கவர்ந்த சின்னத்திரை நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழ் சீசன் 7 ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் முதல் நாளில் இருந்தே மிகுந்த சவால் மிகுந்த மற்றும் சர்ச்சைக்குரிய போட்டியாளராக வலம் வந்த பிரதீப் நேற்று ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். எதற்கெடுத்தாலும் மல்லுக்கட்டுவது, வாக்குவாதம் செய்வது, மிரட்டுவது, ஆபாசமாக பேசுவது, பெண்களிடன் இரட்டை அர்த்தத்தில் பேசுவது என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளால் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், பிரதீப்பை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நடந்த சீசன்களில் சர்ச்சைக்குள்ளான போட்டியாளர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
ஓவியா:
பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியா-ஆரவ் இடையே காதல் உருவானதாக கூறப்பட்டதோடு, இவர்களின் உறவு பற்றி சோஷியல் மீடியாக்களில் வதந்திகள் பரவின. மேலும், பிக்பாஸ் வீட்டிற்குள் ஓவியாவை ஆரவ் முத்தமிட்டது பெரும் சர்ச்சையானது. மேலும், ஓவியாவும், ஆரவ்வுக்கும் ஏற்பட்ட சண்டையால் ஓவியா தற்கொலைக்கு முயன்றார். பின்னர், இவர் நிகழ்ச்சியில் இருந்து பாதிலேயே வெளியேறினார். அதேபோல, சக போட்டியாளர்களால் மனரீதியாக பாதிக்கப்பட்டதால் வீட்டிலிருந்து தப்பிக்க முயன்றுள்ளார் பரணி. இதனாலேயே இவரும் நிகழ்ச்சியின் பாதிலேயே வெளியேறினார்.
மதுமிதா:
பிக்பாஸ் சீசன் மூன்றில் மதுமிதாவிற்கும், மற்ற போட்டியாளர்களுக்கும் கருத்து மோதல் இருந்தது. தமிழ் கலாச்சாரம் பற்றி மதுமிதா பேசியது கடும் சர்ச்சையை கிளப்பியது. மேலும், இவர் கையை வெட்டிக் கொண்டதும் பரபரப்பை கிளப்பியது. மதுமிதா தனக்கு தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டார். அவரின் இந்த செயல் பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதிளை உடைத்ததாக கூறி அவர் உடனடியாக வெளியேற்றப்பட்டார்.
சரவணன்:
அதேபோல, பிக்பாஸ் சீசன் மூன்றில் போட்டியாளர் சரவணன், ”கூட்டமான பேருந்தில் பெண்களை இடிப்பதற்காகவே ஏறியதாக" கூறி இருந்தார். இதற்கு சமூக ஊடகங்களில் கண்டனம் எழுந்தது. பிரச்னையில் வீரியத்தை உணர்ந்த பிக்பாஸ் குழு சரவணனை மன்னிப்பு கோர வைத்தது. அவரும் மன்னிப்பு கேட்டார். பிரச்னை அத்துடன் முடிந்தது என்று அனைவரும் கருதிய வேளையில், நிகழ்ச்சியின் பாதியில் இருந்து ரெட் கார்டு காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
மீரா மிதுன்:
தற்போது அடையாளம் தெரியாமல் போன மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டுமல்லாமல் பல சினிமா பிரபலங்களை வைத்து பல சர்ச்சை தகவல்களை கிளப்பி வந்தார். மூன்றாவது சீசனில் கலந்த கொண்ட இவர், சேரன் மீது பொய்யான பழிகளை சுமத்தி சர்ச்சையை கிளப்பினார். இருப்பினும், இவர் சில வாரங்கள் வீட்டிற்குள் இருந்தார்.
அஸீம்:
பிக் பாஸ் ஆறாவது சீசனில் வெற்றி பெற்ற அஸீமுக்கும், சக போட்டியாளர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் நிலவியது. வாக்குவாதத்தில் அஸீம், சக போட்டியாளர்கைள தரக் குறைவாகவும், மரியாதை இல்லாமலும், எவ்வளவு மட்டமாக பேச முடியுமோ அவ்வளவு மட்டமாக பேசி வந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் அசீம்மை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றுங்கள் எனற கோரிக்கையும் ஆரம்பம் முதலே வலுத்து வந்தது. ஆனால் அவருக்கு வார்னிங் கொடுக்கப்பட்டதோடு, ஆறாவது சீசனின் டைட்டில் வின்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பவா செல்லதுரை:
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியல் பவா செல்லதுரை கலுந்து கொண்ட போதே ஏராளமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனாலும், ஒரு வாரம் தாக்குப்பிடித்த அவர், இரண்டாவது வாரத்தில் தானாகவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். மன உளைச்சலில் இருப்பதாகவும், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.