Behind The Song: பெருமையுடன் வந்து ஆடிய ரோஜா.. “தங்க நிறத்துக்கு” பாடல் உருவான கதை தெரியுமா?
சில பாடல்கள் மட்டும் தான் காலம் கடந்தும் நிலைத்து இருக்கும். வரிகள், இசை, பாடலின் படமாக்கிய விதம் என ஏதோ ஒன்று அதற்கு காரணமாக இருக்கலாம்.
Behind The Song வரிசையில் நெஞ்சினிலே படத்தில் இடம் பெற்ற “தங்க நிறத்துக்கு” பாடல் உருவான விதம் பற்றி காணலாம்.
சில பாடல்கள் மட்டும் தான் காலம் கடந்தும் நிலைத்து இருக்கும். வரிகள், இசை, பாடலின் படமாக்கிய விதம் என ஏதோ ஒன்று அதற்கு காரணமாக இருக்கலாம். நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். அவரின் ஆரம்ப காலகட்டத்தில் பிற இயக்குநர்களின் படங்களில் நடித்துக் கொண்டே நடுநடுவே தனது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் படங்களிலும் நடித்து வந்தார். விஜய்யை டான்ஸர், பாடகர் என பலதுறைகளிலும் செதுக்கியிருந்தார். இப்படியான நிலையில் 1999 ஆம் ஆண்டு எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜய், இஷா கோபிகர், சோனு சூட், மணிவண்ணன், வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, ஸ்ரீமன் என பலரும் நடித்த படம் “நெஞ்சினிலே”.
தேவா இசையமைத்த இந்த படத்தில் பாடல்களை ரவிகுமார், விஜயன், பழனி பாரசி, ஏ.சி.ஜெய்ராம், வாலி, கலைக்குமார் என பலரும் எழுதியிருந்தனர். விஜய் தான் பிரஷாந்த் நடித்த காதல் கவிதை பார்த்து விட்டு அதில் ஹீரோயினாக நடித்த இஷா கோபிகரை இந்த படத்துக்கு பரிந்துரை செய்தார். மேலும் இப்படத்தில் இடம் பெற்ற “தங்க நிறத்துக்கு” பாடலுக்கு நடிகை ரோஜா நடனமாடி அன்றைய காலத்தில் பலரையும் ஆச்சரியப்படுத்தினார். காரணம் அன்றைய காலக்கட்டத்தில் ரோஜா முன்னணி நடிகையாக இருந்த நிலையில் அவரை பலரும் ஒரு பாடலுக்கு ஆட வேண்டாம் என சொல்லியுள்ளனர். ஆனால் தான் ஏன் ஆடினேன் என்பதை நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.
அதாவது, “பெரிய நடிகை ஆனதால் ஒரு பாடலுக்கு ஆடக்கூடாது, ஒரு காட்சியில் நடிக்க கூடாது என்ற விதிகள் எல்லாம் சினிமாவில் இல்லை. பெரிய பெரிய நடிகர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்த படங்கள் மூலம் அவர்களுக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. அந்த மாதிரி என்னை நடிக்க வைத்தால் அந்த பாடல் நன்றாக இருக்கும், இந்தப் பாடல் படத்துக்கு பிளஸ் ஆக அமையும் என தயாரிப்பாளர்கள் நினைத்தால் அது எனக்கு பெருமைதான். அதை குறைவாக எண்ணிவிட முடியாது. அதனால் தப்பாக எடுத்துக் கொள்ளாமல் அந்த பாடலில் நடித்தேன்” என ரோஜா கூறியிருந்தார். ஏ.சி.ஜெய்ராம் எழுதிய இந்த பாடலை நடிகர் விஜய் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.