Chand Nawab Video: ஒரிஜினல் ‛பஜ்ரங்கி பைஜான்’ சந்த் நவாப் வீடியோ விற்பனைக்கு... விலை கேட்டால் தலை சுற்றும்!
நவாசுத்தீன் சித்திக்கி சந்த் நவாப்பின் கதாப்பாத்திரத்தில் பஜ்ரங்கி பைஜான் படத்தில் நடித்த பிறகு அவரும் அந்த வீடியோவும் அதிகம் பிரபலமானது
பாலிவுட் திரைப்பட ரசிகர்கள் யாராலும், சல்மான் கான் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற பஜ்ரங்கி பைஜான் படத்தை மறக்க முடியாது. பாகிஸ்தானிலிருந்து இந்தியா வரும் ரயிலில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு சிறுமி எதிர்பாராத விதமாக தாயை பிரிந்துவிடுவார். அந்த சிறுமியை இந்தியரான சல்மான் கான் பாகிஸ்தானுக்கு சென்று அந்நாட்டு பத்திரிகையாளர் நவாசுத்தீன் சித்திக்கியின் உதவியுடன் தாயிடம் பத்திரமாக ஒப்படைப்பதே இப்படத்தின் கதை.
இந்தியா பாகிஸ்தான் ஒற்றுமையை கருவாக கொண்டு உருவாக்கப்பட்டு இருந்த இப்படத்தில் நவாசுத்தீன் சித்திக்கியின் கதாப்பாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளராக நடித்திருக்கும் நவாசுத்தீன் சித்திக்கி, அங்குள்ள ரயில் நிலையத்தில் மைக்குடன் தொலைக்காட்சிக்காக செய்தி வழங்கும்போது, அங்குள்ள மக்கள் கூட்டத்தால் கடும் இடர்களை சந்திப்பார். இதனால் தொலைக்காட்சிக்கு திக்கித் தடுமாறி செய்தி வழங்குவார்.
பலரையும் குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த இந்த காட்சி உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட ஒன்று என்பது பலருக்கும் தெரியாத கதை. பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்த சந்த் நவாப் என்ற செய்தியாளர் கடந்த 2008-ம் ஆண்டு கராச்சி ரயில்நிலையத்தில் செய்திகளை வழங்கும்போது கூட்டம் காரணமாக பல தடைகளை சந்திப்பார். அந்த வீடியோ அப்போது அதிகம் பிரபலமானது. நவாசுதீன் சித்திக்கி சந்த் நவாப்பின் கதாப்பாத்திரத்தில் பஜ்ரங்கி பைஜான் படத்தில் நடித்த பிறகு அதிகம் பிரபலமானார்.
இந்த நிலையில் அவரது ”கராச்சி சே” வீடியோவை NFT செயலியில் விற்பனை செய்ய இருக்கிறார் சந்த் நவாப். இந்த செயலி டிஜிட்டல் கலைஞர்கள் தங்களது படைப்புகளை விற்பனை செய்ய பயன்படுத்தப்படுகிறது. இதில் என்ன ஆச்சரியம் என்று கேட்கிறீர்களா? அதன் விலை தான். இந்த வீடியோவுக்கு சந்த் நவாப் நிர்ணயித்து உள்ள குறைந்தபட்ச கட்டணம், ரூ.46.75 லட்சம். தலைசுற்றுகிறதா?
இந்த வீடியோவை விற்பனை செய்யும் தளத்தில், சந்த் நவாப் தெரிவித்து உள்ளதாவது, “நான் சந்த் நவாப். பத்திரிகையாளராக உள்ளேன். கடந்த 2008-ம் ஆண்டு நான் எடுத்த வீடியோ யூடியூபில் வைரலானது. கராச்சி ரயில் நிலையத்தில் ஈத் பெருநாள் அன்று செய்தி வெளியிட சென்றபோது அங்கு வந்த கூட்டம் காரணமாக பேச முடியாமல் தடுமாற்றம் அடைந்தேன். கூட்ட மிகுதியால் தொடர் இடையூறுகளுக்கு ஆளாகி, எனது தடுமாற்றமும் அதிகரித்தது. மிகவும் எரிச்சல் அடைந்தேன். அப்போது பதிவான இந்த வீடியோவை யூடியூப் மற்றும் பேஸ்புக்கில் பல லட்சக்கணக்கானோர் பார்வையிட்டனர்.
கடந்த 2015-ம் ஆண்டு இயக்குநர் கபீர் கான் தான் இயக்கிய பஜ்ரங்கி பைஜான் படத்தில் எனது கதாப்பத்திரத்தில் நவாசுதீன் சித்திக்கை நடிக்க வைத்த பின் நான் இன்னும் பிரபலம் அடைந்தேன். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிடம் இருந்தும் அன்பையும் பாராட்டையும் பெற்றேன். சல்மான் கானும் என்னை பாராட்டினார்.” என்றார்.