Ayodhya Ram temple: நாளை அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்; தமிழ் பிரபலங்களில் யாருக்கெல்லாம் அழைப்பு?
அயோத்தியில் உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறவுள்ளது.
![Ayodhya Ram temple: நாளை அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்; தமிழ் பிரபலங்களில் யாருக்கெல்லாம் அழைப்பு? Ayodhya Ram temple immersion tomorrow; Who among the Tamil Kollywood celebrities invited? Here is the list from Rajini to Satish Ayodhya Ram temple: நாளை அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்; தமிழ் பிரபலங்களில் யாருக்கெல்லாம் அழைப்பு?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/fb81ecdd61aee36349af8b74dfa04d541705766461093102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாடு முழுவதும் தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் விஷயம் என்னவென்றால் அது ராமர் கோயில் கும்பாபிஷேகத்தைப் பற்றிதான். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கோயில் திறப்பு விழா இவ்வளவு கவனம் பெறக் காரணம் அதன் பின்னால் இருக்கும் அரசியலும்தான். ராமர் கோயில் குறித்து கடந்த கால தேர்தல்களில் வாக்குறுதிகள் கூட இடம்பெற்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இதனால்தான் ராமர் கோயில் கும்பாபிஷேகம் இவ்வளவு கவனத்தைப் பெற்றிருக்கின்றது.
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா, நாளை அதாவது ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் ஒட்டுமொத்த நாட்டுமக்களின் கவனமும் இந்த விழா பக்கம் திரும்பியுள்ளது. குழந்தை ராமரின் சிலையை நிறுவும் இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் ஒட்டுமொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளதோடு, உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ராமர் கோயில் விழாவை பொதுமக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடும் நோக்கில் பல மாநில அரசுகளும் அடுத்தடுத்து விடுமுறையை அறிவித்து வருகின்றனர். இந்த விழாவில் பங்கேற்க தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் , கன்னடம் என அனைத்து திரைத்துறை பிரபலங்களுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளன.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளுமாறு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பாக நாடு முழுவதும் பல்வேறு பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. பல பிரபலங்கள் கோவிலுக்கு லட்சங்கள் தொடங்கி கோடிகள் வரை கோயில் கட்ட நிதி வழங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் எந்தெந்த திரைப்பிரபலங்களுக்கெல்லாம் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பதை இங்கு காணலாம்.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தமிழ் சினிமா பிரபலங்களில் பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் மிகவும் நெருங்கியவராக கருதப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவர் நாளை மறுநாள் அயோத்திக்குச் சென்று அங்கு நாள் முழுவதும் இருந்துவிட்டு, 23ஆம் தேதி சென்னை திரும்புகின்றார்.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தமிழ் பிரபலங்களான இயக்குநர் மற்றும் பாடலாசிரியர் கங்கை அமரன், இயக்குநர்கள் பாக்கியராஜ், கே.எஸ். ரவிக்குமார், பேரரசு, ஆர்.கே. செல்வமணி, பி. வாசு ஆகியோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் இசையமைப்பாளர்களில் இசைஞானி இளையராஜா, தேனிசைத் தென்றல் தேவா, ஸ்ரீகாந்த் தேவா , டிரம்ஸ் சிவமணி பாடகர்கள் உன்னிகிருஷ்ணன், சங்கர் மகாதேவன் உள்ளிட்டோருக்கும் அழைப்பி விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நடிகர்களில் நாசர், தனுஷ், எஸ்.வி. சேகர், லாரன்ஸ், நமீதா, சதீஷ், பிரசன்னா, தாமு, ஸ்ரீமன், ஸ்நேகா, பிரபு உள்ளிட்டோருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இவர்களில் நடிகர் ரஜினி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு செல்வது உறுதியாகியுள்ளது. மற்றவர்களில் யார் யார் செல்லவுள்ளனர் என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.
ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், ஆன்மீகவாதிகள், திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 8 ஆயிரம் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 3500 பேர் ஆன்மீகவாதிகள், 500 பேர் திரைப்பிரபலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)