‛இப்ப தான் குழந்தை இறந்துச்சு... அதுக்குள்ள சிந்துவும்...’ இயக்குனர் அருண்ராஜாவின் சோகத்தை பகிரும் இயக்குனர் விருமாண்டி
என்னால சிந்துவுடைய இறப்பை நம்பவே முடியல. எப்போதுமே சிரிச்சு பேசிக்கிட்டு இருக்கும். எது நடந்தாலும் பாசிட்டிவா இருக்கும். பல போராட்டங்கள் கஷ்டங்களை தாண்டிதான் அருண்ராஜாவும், சிந்துவும் வாழ்க்கையில ஜெயிச்சாங்க.
கொரோனா தொற்று காரணமாக அருண்ராஜா காமராஜாவின் மனைவி சிந்து இயற்கை எய்தியுள்ளார். இவரது இறப்புக்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்களுடைய வருத்ததை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அருண்ராஜாவின் குடும்ப நண்பரும் 'க/பெ ரணசிங்கம்' படத்தின் இயக்குநருமான விருமாண்டியிடம் சிந்து குறித்த சில நினைவலைகளுக்காக பேசினோம்.
'' என்னால சிந்துவுடைய இறப்பை நம்பவே முடியல. எப்போதுமே சிரிச்சு பேசிக்கிட்டு இருக்கும். எது நடந்தாலும் பாசிட்டிவா இருக்கும். பல போராட்டங்கள் கஷ்டங்களை தாண்டிதான் அருண்ராஜாவும், சிந்துவும் வாழ்க்கையில ஜெயிச்சாங்க. இன்னும் வாழ்க்கையில பார்க்க எத்தனையோ சந்தோஷமான தருணங்கள் இருக்குறப்போ சிந்து மறைஞ்சிட்டாங்க.
ரெண்டு பேரும் காதல் திருமணம் பண்ணிக்கிட்டவங்க. இவங்க ரெண்டு பேருக்கும் குழந்தை இல்லனு வருத்தம் இருந்தது. சொல்லபோனா பத்து மாசத்துக்கு முன்னாடி ஒரு குழந்தை பொறந்து இறந்திருச்சு. இதுவே இவங்களுக்கு தாங்க முடியாத துக்கத்தை கொடுத்திருந்தது. இதுல இருந்து இப்போதான் மீண்டு வந்துட்டு இருந்தாங்க. இதனால, சிந்துவும் கொஞ்சம் உடம்பு சரியில்லாம இருந்தாங்க. இப்போ குழந்தை பிறக்குறதுக்கு சிகிச்சை எடுத்துட்டு இருந்தாங்க சிந்து.
எப்போவும் என்னோட வளர்ச்சியை பார்த்து சந்தோஷபடுவாங்க. தைரியமான வார்த்தைகள் பேசும். வீட்டுக்கு யார் போனாலும் சாப்பாடு போடமா அனுப்பி வைக்காது. எப்போதுமே சிரிச்சுக்கிட்டேதான் இருக்கும். அருண்ராஜாவும் மருத்துமனையிலதான் இருக்கார். காலையில பேசுனே ரொம்ப தேம்பி அழுந்தார். என்னால ஆறுதல் சொல்ல முடியல. சிந்து ரொம்ப அற்புதமான மனுஷி.
சிந்துகூட பழகுனா யாரும் இவங்களை மறக்க மாட்டாங்க. ஒரு பெண் மாதிரி சிந்து இருக்க மாட்டாங்க. ஒரு சகோதரன் மாதிரி கூட நின்னாங்க. நிறைய உரிமை எடுத்துக்கிட்டாங்க. எல்லா குழந்தையும் தன்னுடைய குழந்தை மாதிரி நினைச்சிட்டு பழகும். எப்போவும் என்னோட குழந்தைகளுக்கு சாப்பிட எதுவாது வாங்கி கொடுக்கும்.
குழந்தை இல்லைங்குற ஏக்கத்துகாக வீட்டுல செல்லபிராணியான நாய் ஒன்னை வளர்த்து வந்தாங்க. இந்த நாய் இவங்களுக்கு குழந்தை மாதிரி. அப்படிதான் பார்த்துக்கிட்டாங்க. ரொம்ப தங்கமான பிள்ளை சிந்து.
'அடங்காதே' சண்முகம் மூலமாதான் அருண்ராஜா எனக்கு பழக்கம். சாலிகிராமத்துல என்னோட வீடு இருந்தப்போ அடிக்கடி வீட்டுக்கு வருவாங்க. பத்து வருஷமா குடும்ப நண்பர்களா இருந்துட்டு வந்தோம். கடைசில அருண்ராஜாவையும் என்னை மாதிரி அன்பான சகோதரனையும் விட்டுட்டு சிந்து போயிட்டா. இந்த துக்கத்துல இருந்து எப்படி மீண்டு வர்றதுனே தெரியல.'' என வருத்தமாக தெரிவித்தார் விருமாண்டி.
பிரபலங்கள் எப்போதும் பிரபலமானவர்கள் தான். ஆனால் அவர்களின் குடும்பத்தார் அந்த அளவிற்கு பிரபலமாக இருப்பார்களா என தெரியாது. சிந்து விசயத்தில் , அவர் அனைவராலும் அறியப்படுகிறார். அதை வைத்து பார்க்கும் போதே, அவரின் நட்பண்புகளை நம்மால் உணர முடிகிறது.