Annapoorani Arasu Amma: ‛நீங்க என்னடா என்னை கலாய்க்கிறது...’ திவ்ய தரிசன வீடியோக்களில் ரொமான்ஸ் ‛தம்ப்’ போட்ட அன்னபூரணி!
Annapoorani Arasu Amma: 90's பாடல்களில் வரும் டூயட் காட்சிகளைப் போல, அரசுடன் தோலோடு தோல் சாய்ந்து நிற்கும் அன்னபூரணியின் ரொமான்ஸ் காட்சியை கடந்து தான், நீங்கள் திவ்ய தரிசனத்தை தரிசிக்க முடியும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் திவ்ய தரிசனம் செய்து, திவ்யமாக வாழ்வை தொடங்கவிருந்த அன்னபூரணி அரசு அம்மாவிற்கு, ஜனவரி முதல் நாளே எண்ட் கார்டு போட்டு, எல்லையை தாண்டவிடாமல் செய்தது சமூக வலைதளம். ஓவர் நைட்டில் ஒபாமாவை கடந்த பப்ளிசிட்டி கிடைத்தாலும், போதும் போதும் என்கிற அளவிற்கு விமர்சனங்கள் வந்ததால், அதன் பின் அன்னபூரணி எடுத்த முயற்சிகள் எல்லாம் பின்னடைவையே சந்தித்தது.
சில ஆண்டுகளுக்குக் முன், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்னபூரணி-அரசு ஜோடியின் வீடியோவுக்கு மறுவாழ்வு கொடுத்து, அவரது வாழ்வை ஒருவழியாக்கினர் ஹேட்டர்ஸ். ஆனாலும் அசரவில்லை அன்னபூரணி; தனியார் ஆசிரமத்தில் திவ்ய தரிசனம் வழங்க முடிவு செய்து, அதற்காக கட்டணமும் நிர்ணயித்து வசூலில் இறங்கினர். என்ன செய்ய... அதுவும் வெளியே கசிந்தது.
அவ்வளவு தான்... ஆசிரிம அனுமதியும் ரத்தானது; மீண்டும் பூகம்பம் வெடித்தது. ‛உங்க ஊரும் வேணாம்... உங்க பேரும் வேணாம்...’ என முடிவு செய்த அன்னபூரணி, சென்னைக்கு மிக மிக தொலைவில் உள்ள திருவண்ணாமலைக்கு குடிபெயர்ந்தார். அங்கு ஒரு இடத்தை வாங்கி, அன்னபூரணி அரசு அம்மா ஆசிரமம் தொடங்கியுள்ளார்.
துவக்கவிழா எல்லாம் வெகுவிமர்சையாக நடைபெற்ற நிலையில், பிளாஸ்டிக் சேரில் அமர்ந்து அதே ‛வைபிரேஷன்’ ஆசியை வழங்கிக் கொண்டிருக்கிறார் அன்னபூரணி. ‛தன் மீது வைக்கப்படும் ஒரே குற்றச்சாட்டு, அரசுடன் இருந்த அந்த நாட்களைத் தான் என்பதால், அதை ஏன் மூடி மறைக்க?’ என , முடிவு செய்த அன்னபூரணி, ‛நீங்க என்னடா என்னை கிண்டல் பண்றது... நானே பண்ணிக்கிறேன்’ என்று, தன்னுடைய வீடியோ ‛தம்ப்’களில், தானும் அரசும் சேர்ந்திருக்கும் படியாக போட்டோக்களை வைத்து, திவ்ய தரிசன வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
90's பாடல்களில் வரும் டூயட் காட்சிகளைப் போல, அரசுடன் தோலோடு தோல் சாய்ந்து நிற்கும் அன்னபூரணியின் ரொமான்ஸ் காட்சியை கடந்து தான், நீங்கள் திவ்ய தரிசனத்தை தரிசிக்க முடியும். ‛நானே எல்லாத்தையும் போட்டுட்டா... உங்களுக்கு ஏதுடா கண்டண்ட்...’ என்கிற பாணியில், இறங்கி அடிக்கத் தொடங்கியிருக்கிறார் அன்னபூரணி. அன்னபூரணியின் இந்த அசால்ட் சம்பவத்தால், அவரது ஹேட்டர்ஸ், செய்வதறியாது திணறி வருகின்றனர்.
இனி இது போன்ற அதிரடிகளை முன்நிறுத்தி, அடுத்தடுத்து சம்பவங்களை களமிறக்க முடிவு செய்துள்ளாராம் அன்னபூரணி. இனி ஆக்ஷனில் இறங்கினால் தான், தற்போதுள்ள இடத்தை தக்க வைக்க முடியும் என்று யாரோ ஒருவர், ஆலோசனை வழங்கினாராம். செங்கல்பட்டில் தொடங்கிய பயணத்தை திருவண்ணாமலையில் முடிக்க விடக்கூடாது என்பதில் உறுதியாக நின்று, அரசு புகழை அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்க முடிவு செய்திருக்கிறார் அன்னபூரணி அரசு அம்மா.