‘அன்பில் அவன்’ பட விழாவில் அசோக் செல்வன் முதல் ப்ரீத்தி முகுந்தன் வரை பகிர்ந்த அனுபவங்கள்!
அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ படக்குழுவினர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்.

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபுமோன் அப்துசமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தை ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ளார். ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதியுள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.கே. செல்வா படத்தொகுப்பு செய்துள்ளார். ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா நடைபெற்றது.
தயாரிப்பாளர் அபிநயா: “இந்தப் படத்தை எடுக்க முடிவு செய்ததற்கு முக்கிய காரணம் கதைதான். கதை மிகவும் பிடித்திருந்ததால் படத்தைத் தயாரிக்க முடிவு செய்தோம். அசோக் எனது சகோதரர் மட்டுமல்ல, நல்ல நண்பரும் கூட. ‘அன்பில் அவன்’ அன்பான தம்பதிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதையும் பேசுகிறது. படத்தில் அசோக்கின் கதாபாத்திரத்தைப் பார்த்து இப்படிப்பட்ட கணவர் கிடைக்க வேண்டும் என பலரும் நினைப்பார்கள்.”
இயக்குநர் விக்னேஷ் ராஜா: “ஒரு பயணத்தின்போது மழையில் காரை பாதுகாக்க பிளக்ஸ் பேனரை பயன்படுத்திய சம்பவம்தான் இந்தக் கதையின் முதல் விதை. இது கனவு கண்ட வாழ்க்கையை வாழ விரும்பும் ஒரு தம்பதியினர் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பற்றிய காதல் கதை. அசோக் செல்வனை எனக்கு 15 ஆண்டுகளாகத் தெரியும். இந்தப் படத்தில் அவருடன் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது.”
ப்ரீத்தி முகுந்தன்: “அபிநயாவும் அசோக் செல்வனும் என்னை தங்கள் குழுவில் ஒருவராக ஏற்றுக்கொண்டு வழிகாட்டினார்கள். அசோக்குடன் இணைந்து நடித்தது அற்புதமான அனுபவம். இயக்குநர் கார்த்திகேயன் என்னிடம் இருந்து முதிர்ச்சியான நடிப்பை வெளிக்கொண்டு வந்தார். இந்தப் படத்தின் மூலம் நல்ல எழுத்தாளர், நல்ல இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது.”
கோவிந்த் வசந்தா: “நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் ரசித்து பணியாற்றிய படம் இது. பல திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. நம்பிக்கை அளிக்கும் தரத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.”
அசோக் செல்வன்: “ஒரு படம் ஏதோ செய்துவிட்டு செல்வதாக இல்லாமல், மக்களிடம் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். நல்ல கதையையும் கதாபாத்திரத்தையும் தேர்வு செய்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். இது உலகின் சிறந்த படம் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் நல்ல திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”
ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன்: “இந்தப் படத்தை எனது குடும்பப் படம் போல நினைத்து பணியாற்றினேன். 34 ஆண்டுகால அனுபவத்தில் இப்படியொரு உணர்வு எனக்கு ஏற்பட்டதில்லை. 45 நாட்கள் வேறு எந்தப் பணிக்கும் தேதிகள் கொடுக்காமல் இந்தப் படத்துக்காகவே இருந்தேன். படத்தின் ஆக்ஷன் காட்சிகள் எதிர்பாராத அனுபவமாக இருக்கும்.”
நடிகர் ஹரிஷ் கல்யாண்: “அசோக் செல்வன் மிகவும் துணிச்சலானவர். 70 அடி உயரத்தில் இருந்து குதித்ததாக அவர் சொன்னபோது எனக்கு ஆச்சரியம் ஏற்படவில்லை. ப்ரீத்தி முகுந்தனும் அர்ப்பணிப்புடன் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். இன்னும் ஐந்து ஆண்டுகளில் அசோக் செல்வன் பான் இந்தியா நட்சத்திரமாக வர வேண்டும் என வாழ்த்துகிறேன்.”
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















