(Source: Matrize)
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
பெண்கள் அரசியலில் ஏன் முன்னேறுவதில்லை என்கிற கேள்விக்கு நடிகை ராதிகா சரத்குமார் அளித்துள்ள பதில் கவனத்தை ஈர்த்துள்ளது
ராதிகா சரத்குமார்
பாஜக சார்பில் விருதுநகர் தொகுதியில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார் நடிகை ராதிகா சரத்குமார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த ராதிகா சரத்குமார் தொடர்ச்சியாக படங்களிலும் நடித்து வருகிறார். அரசியலுக்கு வந்த பிறகு படத்தில் நடிப்பீர்களா இல்லையா? என்கிற கேள்வியும் அவரிடம் தொடர்ச்சியாக எழுப்பப்படுகிறது. சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் அரசியலில் ஏன் முன்னேறுவதில்லை? என்கிற பத்திரிகையாளரின் கேள்விக்கு மிகத் தெளிவான விளக்கமளித்துள்ளார் ராதிகா.
ராதிகாவின் பதில் கட்சி சார்புகளை கடந்து அனைத்து தரப்பு பெண்களும் சினிமா, அரசியல் போன்ற துறைகளில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பேசுவதாக அமைந்திருந்ததே இதற்கு காரணம்.
இதனால்தான் பெண்கள் அரசியலில் முன்னேறுவதில்லை
இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜிஃபைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் தொடர் தலைமை செயலகம். ஸ்ரீயா ரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா பிளாக், சித்தார்த் விபின், ஒய்ஜிஎம், சந்தான பாரதி, கவிதா பாரதி மற்றும் பலர் இந்த தொடரில் நடித்துள்ளார்கள். இந்த தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் இருவரும் கலந்துகொண்டார்கள்.
இந்த நிகழ்வில் மொத்தம் 234 எம்.எல்.ஏவில் வெறும் 12 பேர் மட்டுமே பெண்கள் அதேபோல் வெறும் இரண்டு அமைச்சர்கள் மட்டுமே பெண்கள். பெண்கள் ஏன் அரசியலில் முன்னேறுவதில்லை. அவர்களின் வளர்ச்சியை யார் தடுக்கிறார்கள் என்கிற கேள்வியை எழுப்பினார் பத்திரிகையாளர் ஒருவர்.
இதற்கு பதிலளித்த ராதிகா சரத்குமார் “சில நேரங்களில் நிறைய பெண்கள் பின் வாங்கிடுவிகிறார்கள். மனதை இறுக்கமாக ஆக்கிக் கொண்டு இந்த நெகட்டிவிட்டி எல்லாம் நம்மை பாதிக்கக்கூடாது என்று நினைக்கும் பெண்கள் நிறைய வரணும். இப்போகூட இந்த நிகழ்ச்சிக்கு வண்டியில் வரும்போது என்னையும் என் கணவரைப் பற்றியும் ஒருவர் தவறாக பேசியதாக என் கணவர் என்னிடம் சொன்னார். என்ன செய்யலாம்? என்று அவர் என்னிடம் கேட்டார்.
நேரா போய் பளார்னு அடிச்சிட்டு வரலாம்னு சொன்னேன். எங்கள் இருவருக்கும் எப்போதும் இந்த கருத்து வேறுபாடு வரும். ஒரு தப்பு நடக்கிறது என்றால் நான் அதை உடனே சொல்லிவிடுவேன். அவர் அமைதியாக இருந்துவிடுவார். இனிமேலும் அமைதியாக இல்லாமல் இந்த மாதிரியான பதில்களை கொடுப்பதுதான் சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
எதுவும் பேசாமல் இருப்பதால் தான் பெரும்பாலான பெண்கள் பின்வாங்குகிறார்கள். அதுவும் குறிப்பாக சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தால் உடனே நீங்கள் அரசியலில் இருந்துகொண்டு சினிமாவில் நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். இதுவே ஒரு ஆணிடம் சென்று இந்த கேள்வியை கேட்பீர்களா. எங்களால் எல்லாமுமாக இருக்க முடியும் என்னுடைய நேரத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று எனக்கு தெரியும்” என்று அவர் பதிலளித்துள்ளார்