Jyothika: அன்னைக்கு டீனேஜ் ஃபேன், இப்போ 150வது பட தயாரிப்பாளர்.. அக்ஷய்குமார் பற்றி ஜோதிகா நெகிழ்ச்சி!
Jyothika - Akshay Kumar: சூரரைப்போற்று இந்தி ரீமேக் சர்ஃபிரா படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் வெற்றிபெற நடிகர் அக்ஷய் குமாருக்கு ஜோதிகா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சூரரைப்போற்று
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான படம் சூரரைப்போற்று. சூர்யாவின் 2D என்டர்டெயின்மெண்ட் இப்படத்தைத் தயாரித்தது. கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணத்தால் இப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை, சிறந்த இசை என மொத்தம் ஐந்து தேசிய விருதுகளை இப்படம் வென்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இந்தி ரீமேக் ஆன சர்ஃபிரா இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சர்ஃபிரா
இப்படத்தில் அக்ஷய் குமார் நாயகனாக நடித்துள்ளார். ராதிகா பிஸ்வாஸ், ராதிகா மதன், பரேஷ் ராவல் உள்ளிட்டவர்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தியிலும் சூர்யா ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மெண்ட் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
தமிழில் தான் எடுத்த இறுதிச் சுற்று படத்தைத் தொடர்ந்து தற்போது இந்தப் படத்தையும் சுதா கொங்காரா இயக்கியுள்ளார். இது குறித்து அவர் பேசும்போது “என்னுடைய முதல் படம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து நான் இறுதிச்சுற்று படத்தை இயக்கினேன்.
அப்போது என்மேல் பெரிய அளவில் யாரும் நம்பிக்கை வைக்கவில்லை. தமிழில் இறுதிச் சுற்று படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அந்தப் படத்தை தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமெக் செய்யும் வாய்ப்புகள் என்னைத் தேடி வந்தன. சூரரைப் போற்று படம் ஓடிடியில் வெளியானது. இந்தப் படத்தை திரையரங்கத்தில் பார்க்க வேண்டும் என்பது என் ஆசை. அப்படியே தமிழில் இருந்தது போல் இல்லாமல் இப்படத்தில் சில மாற்றங்களை செய்திருக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.
ALSO Read | Indian 2 Review: ரசிகர்களுக்கு விருந்தா? லஞ்சத்தை ஒழிக்க மருந்தா? இந்தியன் 2 முழு திரை விமர்சனம் இதோ
அக்ஷய் குமாருக்கு வாழ்த்து தெரிவித்த ஜோதிகா
கடந்த சில நாட்கள் முன்பாக சர்ஃபிரா படத்தின் சிறப்புத் திரையிடல் மும்பையில் நடைபெற்றது. தமிழைப் போலவே சுதா கொங்காராவின் படத்திற்கு இந்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த சிறப்பு திரையிடலில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா கலந்துகொண்டார்கள். இன்று ஜூலை 12ஆம் தேதி சர்ஃபிரா படம் திரையரங்கில் வெளியாகியுள்ளது. அக்ஷய் குமாரின் 150வது படமாக இப்படம் உருவாகியுள்ளதால் படத்துக்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
View this post on Instagram
சர்ஃபிரா படம் வெற்றிபெற நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் அக்ஷன் குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தான் அக்ஷய் குமாரின் மிகப்பெரிய ரசிகையாக இருந்ததாகவும், தனது அறையில் அவரது போஸ்டரை ஒட்டி வைத்திருந்ததாகவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
ஒரு ரசிகையாக இருந்து இன்று அவரது 150-வது படத்தை தயாரிக்கும் வாய்ப்பு குறித்த தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார் ஜோதிகா.