Actress Brigida: ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது.. வாழ்த்து சொல்ல போனை போட்டு அழுத நடிகை பிரிகிடா..!
நடிகர் பார்த்திபன் நடித்துள்ள இரவின் நிழல் படத்திற்காக பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்துள்ள நிலையில் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நடிகர் பார்த்திபன் நடித்துள்ள இரவின் நிழல் படத்திற்காக பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்துள்ள நிலையில் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
‘இரவின் நிழல்’
சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் இயக்குநர் பார்த்திபனும் ஒருவர். அவரின் கை வண்ணத்தில் கடந்தாண்டு வெளியான படம் ‘இரவின் நிழல்’. உலகின் முதல், “நான் லீனியர் சிங்கிள் ஷாட்” படமாக உருவான இந்தப்படம் திரையரங்குளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடிகைகள் பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
படம் பார்த்த பலரும் பார்த்திபனின் வித்தியாசமான முயற்சியை பாராட்டிய நிலையில், இந்த படம் கடும் சர்ச்சைகளையும் சந்தித்தது. ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியல் வரை சென்ற இரவின் நிழல் படம் ஏராளமான பட விழாக்களில் விருதுகளை வென்றது. இதனிடையே 3 மாதங்கள் கழித்து நவம்பர் மாதம் இரவின் நிழல் படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.இது தனக்கே தெரியாமல் நடந்ததாக பார்த்திபன் பதிவிட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தேசிய திரைப்பட விருதுகள்
நிலைமை இப்படியிருக்க நேற்று 69வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இரவின் நிழல் படத்தில் இடம் பெற்ற ‘மாயவா சாயவா’ பாடலுக்காக ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பாடகர் (பெண்) பிரிவில் விருது கிடைத்துள்ளது. இதனை இரவின் நிழல் படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.
View this post on Instagram
அந்த வகையில் நடிகர் பார்த்திபன் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், இந்த விருதுக்கு முழு காரணமான விஞ்ஞானியான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி.அந்த படத்திற்காக பணிபுரிந்த ஊழியர்களில் ஒருவனாக மகிழ்ச்சியடைகிறேன். இரவின் நிழல் படத்துக்கு 120 தேசிய விருதுகள் கிடைத்தும் கூட தேசிய விருது அறிவிப்பில் பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தது . அதில் என் படத்தின் பெயர் இருப்பது மகிழ்ச்சி. பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு நன்றி என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் படத்தில் ‘மாயவா சாயவா’ பாடலில் திரையில் இடம் பெற்றிருந்தவர் நடிகை பிரிகிடா. இவர் ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்ததற்கு வாழ்த்து தெரிவிக்க போன் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக, ‘உனக்கு சினிமாவில் சிறந்த எதிர்காலம் அமையும். நிறைய படங்களில் நடிக்க வேண்டும்’ என நடிகை பிரிகிடாவை ஸ்ரேயா கோஷல் வாழ்த்தினார். இதனைக் கேட்டு அவரின் கண்கள் கலங்கியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.