(Source: ECI/ABP News/ABP Majha)
Actress Roja: நடிகை ரோஜாவுக்கு என்னாச்சு.. திடீரென மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்...
நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு படங்களின் மூலம் திரையுலகில் நுழைந்த நடிகை ரோஜா தமிழில் ஆர்.கே.செல்வமணி இயக்கிய செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தொடர்ந்து தமிழில் ரஜினி, சரத்குமார், சத்யராஜ், விஜயகாந்த், கார்த்திக், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து புகழ் பெற்ற பிரபலங்களில் ஒருவராக வலம் வந்தார். தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்த ரோஜா அரசியலிலும் மிளிர்ந்தார்.
1999 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த ரோஜா அக்கட்சியின் தெலுங்கு மகிளா பிரிவின் தலைவராக இருந்தார். தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து 2014, 2019 ஆகிய சட்டமன்ற தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆந்திர அரசியலில் ரோஜாவின் ஒவ்வொரு நகர்வும் கவனிக்கத்தக்க ஒன்றாகவே மாறியது.
தற்போது ஆந்திர அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள ரோஜா சமீபத்தில் ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்தார். இதனால் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இப்படியான நிலையில் நடிகை ரோஜா சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கால் வீக்கம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோஜா விரைந்து குணமாக ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் சமூக வலைத்தளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.