Divya Sathyaraj: அரசியலில் இருந்தால் புடவைதான் கட்டணுமா? சத்யராஜ் மகள் அதிரடி..
எந்த ஒரு பெண்ணுக்கும் தனக்கு பிடித்த மாதிரியான ஆடைகளை அணிவதற்கான சுதந்திரம் இருக்கிறது என்று நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்
திவ்யா சத்யராஜ்
மகிழ்மதி என்கிற தனியார் நிறுவனத்தின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ்.
இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஊட்டச்சத்து நிபுனர்களில் ஒருவர் திவ்யா. மேலும் மணிப்பூர், இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு தனியார் தன்னார்வல அமைப்புகளுடன் இணைந்து ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். அரசியல்ரீதியாக சமத்துவத்தை முன்வைத்தே தனது கருத்துக்களை பொதுத் தளங்களில் பேசி வருபவர். பெண்களுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருப்பதால் தான் சனாதன தர்மத்தை மறுக்கிறேன் என்று கடந்த ஆண்டு இவர் தெரிவித்த கருத்து கவனம் பெற்றது.
இதனைத் தொடர்ந்து அரசியலில் தனக்கு ஆர்வம் இருப்பதாக திவ்யா சத்யராஜ் பேசியதைத் தொடர்ந்து அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைய இருப்பதாக போலியான தகவல்கள் வெளியாகின. பாரதிய ஜனதா கட்சியில் சேர தனக்கு அழைப்பு வந்தது உண்மைதான், ஆனால் மதத்தை கொண்டாடும் கட்சியில் சேர தனக்கு விருப்பமில்லை என்று திவ்யா சத்யராஜ் தெரிவித்தார்.
அதிகாரத்திற்காக தான் அரசியலுக்கு வர விரும்பவில்லை, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற நோக்கத்திற்காகவே தான் அரசியலில் வருவேன் என்று அவர் தெரிவித்தார். மேலும் மக்களவைத் தேர்தல் முடிந்ததும் தான் எந்தக் கட்சியில் சேர இருப்பதாக அறிவிப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.
சமூக செயற்பாட்டாளர் என்றால் ஃபேஷனாக இருக்கக்கூடாதா?
பொதுவாக அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஃபேஷனாக ஆடைகள் அணியக் கூடாது என்கிற கருத்து வெகுஜனத்தில் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண் பிரமுகர்கள் கொஞ்சம் ஃபேஷனாக ஆடை அணிந்தாலும் அவர்களின் கேரக்டர் மற்றும் அவரது செயல்பாடுகள் அனைத்தையும் அவமானப்படுத்திவருகிறார்கள் கலாச்சாரக் காவலர்கள். இதனை உடைக்கும் வகையில் தனக்கு பிடித்தமான ஆடைகளை அணிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திவ்யா சத்யராஜ்.
View this post on Instagram
மேலும், இது தொடர்பாக தனது முந்தைய நேர்காணல் ஒன்றில் அவர் இப்படி கூறியுள்ளார். “நான் அரசியலில் ஆர்வம் காட்டுவதாலும் சமூக செயல்பாடுகள் செய்துவருவதாலும் நான் மாடர்னாக ஆடைகள் அணிய வேண்டாம். அது என் மேல் இருக்கும் மக்களின் அபிப்பிராயத்தை மாற்றும் என்று என்னுடய நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்கள் எனக்கு ஆலோசனை கூறினார். இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு அரசியல்வாதி என்றால் அவர் புடவை மட்டும் தான் அணியவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நான் யார் என்பதையோ என்னுடைய விருப்பங்களையோ எந்த வகையிலும் மறைத்துக் கொள்ள விரும்பவில்லை. பெரியாரின் கொள்கைகளை பின்பற்றும் ஒருவராக ஒரு பெண் தனக்கு பிடித்த ஆடைகளை அணியும் சுதந்திரம் அவருக்கு உள்ளது என்று நான் நம்புகிறேன். மக்கள் என்னுடைய ஆடைகளை வைத்து இல்லாமல் என்னுடைய செய்ல்பாடுகளின் அடிப்படையில் என்னை மதிப்பிடுவார்கள் என்று நம்புகிறேன்” என்று திவ்யா சத்யராஜ் தனது நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்