Prashanth: பட்டத்தை தவறவிட்ட பிரசாந்த்! காரணம் யாரு தெரியுமா? நடந்தது இதுதான்..
நடிகர் பிரசாந்த் தனது திரை வாழ்வில் தவறவிட்ட இரண்டு படங்கள் நடிகர் அஜித்திற்கு சென்று மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக மாறியுள்ளது.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக உலா வந்தவர் நடிகர் பிரசாந்த். விஜய், அஜித்திற்கு முன்பே தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 1990 – 2000 இடையே காலகட்டங்களில் விஜய், அஜித்தை காட்டிலும் அதிகளவு ரசிகர்களை கொண்டிருந்த நடிகர் என்ற பெருமையை கொண்டிருந்தார்.
பிரசாந்த் தவறவிட்ட படங்கள்:
ஆனால், 2000த்திற்கு பிறகு அவரது படங்கள் பெரியளவில் வெற்றி பெறாததால் அவர் திரை வாழ்வு சரிவை நோக்கிச் சென்றது. இந்த சூழலில், நடிகர் பிரசாந்த் தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து கோட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் பிரசாந்திற்கு நடிகர் விஜய்க்கு இணையான கதாபாத்திரம் என்பதால் அவர் மீண்டும் சினிமாவில் கம்பேக் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவில் தவறவிட்ட இரண்டு முக்கிய படங்கள் பற்றி அவரது தந்தை பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக உலா வரும் ஏ.ஆர்.முருகதாஸின் முதல் திரைப்படம் தீனா. நடிகர் அஜித்தின் திரை வாழ்வில் அவருக்கு தல என்ற பெயர் பெற்றுத்தந்த படம்.
தவறிய பட்டம்:
2001ம் ஆண்டு வெளியான தீனா படம் அஜித்திற்கு தல என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்ததுடன், அவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியது. பிரசாந்த் அதே ஆண்டில் நடித்த பிரியாத வரம் வேண்டும், ஸ்டார், சாக்லேட், மஜ்னு படங்கள் வெற்றி பெற்றாலும் தீனா படம் வசூலை வாரிக்குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
காரணம் என்ன?
இந்த படத்தில் நாயகனாக நடிக்க முதன்முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் அணுகியது நடிகர் பிரசாந்தையே ஆகும். பிரசாந்த் படப்பிடிப்பில் தீவிரமாக இருந்ததால், படத்தின் கதையை அவரது தந்தை தியாகராஜனே கேட்டுள்ளார். பிரசாந்த் படப்பிடிப்பில் தீவிரமாக இருப்பதால் சில நாட்கள் கழித்து படத்தை தொடங்கலாம் என்று தியாகராஜன் கூறியுள்ளார். ஆனால், அதற்குள் அஜித்தின் கால்ஷீட் கிடைத்ததால் ஏ.ஆர்.முருகதாஸ் அஜித்திடம் கதையை கூறி தீனா வெற்றிப்படத்தை தந்துவிட்டார்.
அதேபோல, பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ராஜீவ்மேனன் இயக்கி தமிழில் எவர்கிரீன் ஹிட் திரைப்படமாக திகழும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் முதலில் அஜித்தின் கதாபாத்திரத்திற்கு தேர்வானவர் நடிகர் பிரசாந்த். ராஜீவ்மேனன் இதுதொடர்பாக பிரசாந்தின் தந்தை தியாகராஜனை அணுகியபோது, ராஜீவ்மேனனிடம் இந்த படத்தில் நடிகர் பிரசாந்திற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
ஜீன்ஸ் படத்தில் பிரசாந்த் – ஐஸ்வர்யா ராய் ஜோடி பெரும் வெற்றி பெற்றதால் அவர்கள் ஜோடியை பார்க்க ரசிகர்கள் விரும்புவார்கள் என்ற எண்ணத்தில் கூறியதுடன், பிரசாந்தை விட தபு வயதில் மூத்தவர் போல தோற்றம் அளிக்கிறார் என்றும் தியாகராஜன் கூறியுள்ளார். இதையடுத்து, இந்த கதாபாத்திரத்திற்கு ராஜீவ்மேனன் நடிகர் அஜித்தை தேர்வு செய்துள்ளார்.
நடிகரும், இயக்குனருமான தியாகராஜன் தனது மகன் பிரசாந்திற்கு வந்து வேண்டாம் என்று ஒதுக்கிய இரண்டு திரைப்படங்களும் நடிகர் அஜித்தின் திரை வாழ்வில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.