19 years of Azhagiya Theeye : வழக்கமான ஃபார்முலா.. கொண்டாட மறந்த படம்.. 19 ஆண்டுகளை நிறைவு செய்த 'அழகிய தீயே'..!
வழக்கமான சில ஃபார்முலா கொண்ட படம் 'அழகிய தீயே' என்றாலும் சில ஸ்வாரஸ்யமான விஷயங்கள் கதையின் குறைகளை வெளியில் தெரியாமல் அழகாக்கியது.
தமிழ் சினிமாவில் ஆக்ஷன், அதிரடி, வெட்டு, கொலை, கொள்ளை போன்ற யதார்த்தத்தையும் மீறி வெளியாகும் படங்கள் பெரும் வரவேற்பை பெற்று வந்த காலகட்டத்தில் ஒரு நல்ல கதையை மெல்லிய உணர்வுகள் மூலம் ரசிகர்களிடையே கொண்டு சேர்த்த திரைப்படம் "அழகிய தீயே". இப்படம் வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
புது வசந்தம் ஸ்டைலில் இயக்குனர் ராதா மோகன் இயக்கிய ஒரு படம் தான் "அழகிய தீயே". படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிகவும் அழகாக எந்த ஒரு குழப்பமும் தடங்களுக்கும் இல்லாமல் செதுக்கப்பட்டதற்கு சாட்சி திரையில் வெளிப்பட்டது. பிரசன்னா, நவ்யா நாயர், பிரகாஷ்ராஜ், பிரமிட் நடராஜன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
பணக்கான அப்பா நிச்சயம் செய்த திருமணத்தில் இருந்து தப்பிப்பதற்காக ஹீரோயின் ஹீரோவின் உதவியை நாடுகிறார். அதற்காக அவர்கள் இருவரும் காதலிப்பதாக வரப்போகும் வெளிநாட்டு மாப்பிள்ளையிடம் பொய் சொல்ல அந்த மாப்பிளையோ சிக்கலை எல்லாம் மீறி இருவருக்கும் பதிவு திருமணம் செய்து வைத்து ஒன்றாக ஒரே வீட்டில் தங்க வைத்து விட்டு செல்கிறார். எலியும் பூனையுமாக இருக்கும் ஹீரோவும் ஹீரோயினும் கொஞ்சம் கொஞ்சமாக நட்பாகி பின்னர் அது காதலாக மாறுகிறது.
இருவருக்குள்ளும் காதல் எப்போது நுழைந்து என்பதே தெரியவில்லை. இருப்பினும் வழக்கம் போல இருவரும் அதை வெளிப்படுத்தாமல் உள்ளுக்குள்ளேயே வைத்து கொள்கிறார்கள். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி வரை அந்த ரகசியத்தை உள்ளுக்குள்ளேயே ஒளித்து வைத்து கொள்கிறார்கள். கடைசியில் இருவரும் ஒன்றாக சேர்ந்தார்களா என்பதோடு படம் சுபம் கார்டுடன் முடிவடைகிறது.
பணக்கார அப்பாவே வில்லன், அமெரிக்கா மாப்பிள்ளை, வாழ்க்கையில் ஜெயிக்க துடிக்கும் ஹீரோ என வழக்கமான சில பார்முலா பயன்படுத்தப்பட்டு இருந்தாலும் சில ஸ்வாரஸ்யமான விஷயங்கள் கதையின் குறைகளை வெளியில் தெரியாமல் அழகாக்கியது. அப்பாவியான ஹீரோவாக சிறப்பாக பல இடங்களில் ஸ்கோர் செய்து இருந்தார் நடிகர் பிரசன்னா. வழக்கம் போல பிரகாஷ்ராஜ் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்து இருந்தார்.
மெல்லிய தென்றலாக நவ்யா நாயரின் நடிப்பு. ரமேஷ் விநாயகத்தின் இசையில் பாடல்கள் இனிமையாக அமைந்தது. இந்த படத்தின் பெயர் தெரியாதவர்கள் கூட, ”விழிகளின் அருகில் வானம்” பாடலை அந்த படமா என கேட்பார்கள். அந்த அளவுக்கு அந்த காலக்கட்டத்தில் அழகிய தீயே படத்தின் இந்த பாடல் பிரபலம்.
களேபரமான படங்களுக்கு நடுவே தமிழ் சினிமாவுக்கு ஒரு கலப்படமில்லாத சுத்தமான ஆக்ஸிஜன் போல வந்த 'அழகியே தீயே' கொண்டாட மறந்த திரைப்படங்களில் ஒன்று.