Sonam Wangchuk: பிறந்த நாளில் சோனம் வாங்சுக் போராட்டத்தில் பங்கேற்ற பிரகாஷ்ராஜ் - யார் அவர்?
லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்தும், பழங்குடி மக்களுக்கு சுயாட்சி உரிமையும் கேட்டு கடந்த 21 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் சோனம் வாங்சுக்
நண்பன் படத்தில் விஜய் நடித்த ‘கொஸக்சி பசப்புகழ்’ கதாபாத்திரம் சோனம் வாங்சுக்கை உதாரணமாகக் கொண்டு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சோனம் வாங்சுக்
சங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளியான படம் நண்பன். இப்படத்தில் விஜய் தனுஷ்கோடியில் வித்தியாசமான முறையில் ஒரு ஸ்கூலை உருவாக்கி நடத்தி வருவார். இந்தக் கதாபாத்திரம் சோனம் வாங்சுக் என்பவரை உதாரணமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. லடாக்கைச் சேர்ந்த சோனம் வாங்சுக் ஒரு பொறியியலாளர் மற்றும் கல்வி சீர்திருத்தவாதி.
லடாக்கில் SECMOL என்கிற மாணவர்களின் கல்வி மற்றும் கலாச்சார அமைப்பு எனும் தன்னார்வல அமைப்பு ஒன்றை தொடங்கி வைத்தவர். இந்த அமைப்பின் வழியாக சூரிய எரிசக்தி மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுத்தாத முறையில் மின்சார பயன்பாட்டை நடைமுறைப்படுத்தியுள்ளார். கடந்த மார்ச் 6ஆம் தேதி முதல் 21 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார் சோனம் வாங்சுக்.
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வேண்டும்
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும் அரசியல் சாசனத்தில் ஆறாவது அட்டவணையை அமல்படுத்தக்கோரியும் இந்தப் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார் சோனம் வாங்சுக். கடந்த 2023ஆம் ஆண்டும் இந்திய அமைச்சரவை லடாக்கில் 13 ஜிகா வாட் திட்டத்திற்கான ஒப்புதலை வழங்கியது.
இந்தத் திட்டத்தின்படி லடாக்கில் இருந்து மின் ஆற்றலை பிற மாநிலங்களுக்கு பரிமாற்றம் செய்வதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும். ஆனால் இந்தத் திட்டம் லடாக் மக்களிடம் எந்தவித கருத்துக் கேட்பும் நடத்தாமல் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாக கூறுகிறார் சோனம் வாங்சுக்.
மேலும் லடாக் பகுதியில் இந்திய அரசின் தொழில்மயமாக்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் அழிவுகள் ஏற்படுவதைத் தடுப்பதையும் இந்தப் போராட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாக முன்வைக்கிறார் அவர். 21ஆவது நாளாக தொடரும் இந்தப் போராட்டம் இன்றுடன் முடிவுக்கு வர இருக்கிறது. இந்திய அரசிடம் இருந்து எந்தவித சமரசமுல் ஏற்படாத நிலையில் தனது உடல் நிலை தேறியவுடன் மீண்டும் அடுத்தக்கட்ட போராட்டத்தை தொடங்க இருப்பதாக சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.
சோனம் வாங்சுக்கை சந்தித்த பிரகாஷ் ராஜ்
Its my birthday today .. and i’m celebrating by showing solidarity with @Wangchuk66 and the people of ladakh who are fighting for us .. our country .. our environment and our future . 🙏🏿🙏🏿🙏🏿let’s stand by them #justasking pic.twitter.com/kUUdRakYrD
— Prakash Raj (@prakashraaj) March 26, 2024
சோனம் வாங்சுக்கின் இந்தப் போராட்டத்திற்கு நாடு முழுவதிலும் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் வாழும் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் அவரது இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்கள். இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் பிரகாஷ் ராஜ் சோனம் வாங்சுக்கின் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். “நம்முடைய எதிர்காலத்திற்காக போராடும் லடாக் மக்களின் போராட்டத்தில் கலந்துகொண்டு என்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகிறேன்” என்று பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.