Mohan: பல படங்களுக்கு அணுகிய வெங்கட்பிரபு.. கோட் படத்தில் மட்டும் நடிக்க ஒப்புக்கொண்ட மோகன்.. ஏன்?
நான் நடிக்காத இத்தனை ஆண்டுகளும் எனக்கு கதைகள் வந்து கொண்டு தான் இருந்தது. இது என்னை சுற்றி இருக்கும் திரைத்துறை சார்ந்தவர்களுக்கும் தெரியும் என நடிகர் மோகன் கூறியுள்ளார்.

சினிமாவில் நடிக்காத காலக்கட்டத்திலும் தன்னை தேடி கதைகள் வந்து கொண்டிருந்ததாக நடிகர் மோகன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 1980களின் காலகட்டத்தில் வெள்ளிவிழா நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் மோகன். “மைக்” மோகன் என சொல்லப்படும் அளவுக்கு நடித்த படங்கள் எல்லாம் சூப்பர்ஹிட் அடித்தது. பாலு மகேந்திராவின் மூடு பனி படம் மூலம் எண்ட்ரீ கொடுத்த அவர் பயணங்கள் முடிவதில்லை, மெல்லத் திறந்தது கதவு, விதி, கிளிஞ்சல்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, உதய கீதம், ரெட்டை வால் குருவி, நூறாவது நாள், பாச பறவைகள் என ஏகப்பட்ட படங்களில் நடித்தார்.
1991 ஆம் ஆண்டு உருவம் படத்தில் நடித்த மோகன் அதன்பிறகு கிட்டதட்ட 8 ஆண்டுகள் எந்த படத்திலும் நடிக்கவில்லை. 1999ல் அன்புள்ள காதலுக்கு, 2005ல் சுட்டபழம் என இரு படங்களில் மட்டுமே நடித்தார். கிட்டதட்ட 19 ஆண்டுகளுக்கு பிறகு ஹரா படத்தில் ஹீரோவாகவும், விஜய் நடிக்கும் The Greatest of All Time படத்தில் வில்லனாகவும் மோகன் நடித்து வருகிறார். இதில் ஹரா படம் நாளை (ஜூன் 7) ஆம் தேதி தியேட்டரில் வெளியாகிறது.
இதனிடையே நேர்காணலில் பேசிய மோகன், “நான் நடிக்காத இத்தனை ஆண்டுகளும் எனக்கு கதைகள் வந்து கொண்டு தான் இருந்தது. இது என்னை சுற்றி இருக்கும் திரைத்துறை சார்ந்தவர்களுக்கும் தெரியும். இடைப்பட்ட காலத்தில் தயாரிப்பாளர், இயக்குநராக இயங்கி கொண்டிருந்தேன். கதைகளில் ஏதோ கனெக்ட் இல்லாததால் நடிக்க முடியாமல் இருந்தது.
ஹரா படத்தில் இயக்குநர் கதை சொல்லும்போது சில விஷயங்கள் நன்றாக இருந்தது. நானும் சில பரிந்துரைகள் சொன்னேன். அவர் அதை ஏற்றுக்கொண்டு என்னை உற்சாகப்படுத்தினார். 6, 7 முறை கதை மாற்றம் செய்து இறுதி வடிவம் பெற்றது. அதேபோல் வெங்கட் பிரபு அவரின் பல படங்களுக்கு என்னை அணுகியிருக்கிறார். ஆனால் என்னால் அதை பண்ண முடியவில்லை.
கோட் படத்தின் கதை சொன்னபோது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் ஹரா படத்துக்காக தாடி வைத்திருந்ததால் காத்திருக்க சொன்னேன்.ஆனால் வெங்கட் பிரபு இந்த தோற்றத்திலேயே கேரக்டரை உருவாக்கி விட்டார். நான் நம்பிக்கை வைத்து நடத்தியுள்ளேன். ஒரு கதை என்னை கவர்ந்தால் போதும், ஏன் என்னை தேடி வந்தீர்கள் என யாரிடமும் கேட்க மாட்டேன்” என கூறியுள்ளார்.





















