Karunas: மக்களுக்கு உழைச்சேன்.. மாமா, மச்சான்னு தரம் தாழ்ந்து பேசிட்டாங்க.. கருணாஸ் வேதனை!
2009ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையில் என் வீட்டு பெட்ரூமில் ஒரு போர்டு வைத்து அதில் இந்த நபருக்கு இவ்வளவு கடன், இவ்வளவு வட்டி, இந்த தேதியில் கொடுக்க வேண்டும் என எழுதியிருப்பேன் என கருணாஸ் கூறியுள்ளார்.

நடந்தது என்னவென்று தெரியாமல் என்னை தரம் தாழ்ந்து பேசுவதெல்லாம் என்ன மாதிரியான மனநிலை என நடிகர் கருணாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
அரசியலில் களமிறங்கியது தப்புன்னு நினைச்சிருக்கீங்களா? என்ற கேள்வி கருணாஸிடம் எழுப்பப்பட்டது. அதற்கு, “யார் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஒரு விஷயம் தான். அரசியல் என்பது மக்களுக்கானது. ஆனால் அந்த அடிப்படை அரசியல் அவர்களிடத்தில் இல்லை. அப்படியிருக்கும்போது நான் ஏன் எல்லோரையும் பகைத்துக் கொண்டு என் சந்தோசத்தையும் கெடுத்துக் கொண்டு, என் குடும்பத்தோடு நேரம் செலவழிக்காமல் இருக்க வேண்டும் என கேட்கிறேன். நான் மக்களுக்காக வேலை செய்வேன். பதிலுக்கு என்னை மாமா, மச்சான் என சொல்வீர்கள். எதுக்கு நான் அசிங்கப்படணும்?.. என்ன நடந்தது என்று தெரியாமல் யாரோ ஏதோ சொல்லி விட்டார்கள் என்றதும் அப்படி தரம் தாழ்ந்து பேசுகிறீர்களே?.. உங்கள் புத்தி எப்படி இருக்கும்?.. நல்லதை மட்டும் நினையுங்கள்.
நான் சினிமாவில் சம்பாதித்தது என்பது குறைவு தான். ஆனால் இழந்தது அதிகம். 2009ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையில் என் வீட்டு பெட்ரூமில் ஒரு போர்டு வைத்து அதில் இந்த நபருக்கு இவ்வளவு கடன், இவ்வளவு வட்டி, இந்த தேதியில் கொடுக்க வேண்டும் என எழுதியிருப்பேன். தூங்கி எழுந்தும் ஒவ்வொரு நாளும் அதைத் தான் பார்ப்பேன். இந்த கடனையெல்லாம் எப்படியாவது அடைக்க வேண்டும் என நினைப்பேன். நானும், என் மனைவியும் மேடை நிகழ்ச்சிகளில் பாடுவோம். பணம் வந்தால் வீட்டுக்கு வந்தால் மனது மாறிவிடும் என்பதால் வழியிலேயே அதனைப் பிரித்து வட்டி கட்டி விடுவேன். இன்றைக்கும் சினிமாத்துறையில் நான் கொடுத்த செக் பணமில்லை என திரும்பி வந்ததாகவோ, வட்டிக்கு பணம் வாங்கி கொடுக்காமல் இருந்ததாகவோ எதுவும் இல்லை. கடன் கொடுத்தவர்கள் போன் செய்தால் நான் எடுக்கவில்லை என்றால் நான் செத்து போயிருப்பேன் அவ்வளவு தான். உனக்கு பயந்துகிட்டு எல்லாம் நான் போனை எடுக்காமல் இருக்க மாட்டேன்.
அவ்வளவு பெரிய கஷ்டத்தையெல்லாம் கடந்து வந்திருக்கிறேன். அந்த நாணயம் தான் இன்றைக்கும் சினிமாத்துறை, அரசியலிலும் தனிப்பட்ட மரியாதையை கொடுத்திருக்கிறது. நான் நஷ்டப்படும் போதெல்லாம் என் மனைவி கிரேஸிடம் ஒன்று மட்டும் தான் சொல்வேன். நான் சினிமாத்துறையை நம்புகிறேன் என கூறுவேன். பொறி படம் மூலம் ரூ.63 லட்சம், கற்றது தமிழ் படம் மூலம் ரூ.2 கோடி என அந்த காலத்திலேயே நஷ்டம் ஏற்பட்டது. நாம் எதை நம்புகிறோமோ அது நம்மை கைவிடாது என கருணாஸ் கூறியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















