Ponniyin Selvan: "இப்படியெல்லாம் பண்ணிட்டு ஷூட்டிங் வராதீங்க.." கார்த்தியிடம் கறாராக பேசிய மணிரத்னம்..!
Karthi: பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ள நிலையில், அப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்றை நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படம், ரசிகர்களிடையே பெரும் வரவேறப்பினை பெற்றது. இதைத்தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமும் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது. அதற்கான ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, பெங்களூருவில் நடைப்பெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது, படத்தில் வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்தி தனது கதாப்பாத்திரம் குறித்த சுவாரஸ்யமான செய்தியை பகிர்ந்து காெண்டார்.
“புத்தகத்தை படித்து விட்டு..”
பொன்னியின் செல்வன் படத்தில் மிக முக்கிய கதாப்பாத்திரங்களுள் ஒன்று, வல்லவராயன் வந்தியத்தேவன். இந்த கதாப்பாத்திரத்தை நன்கு புரிந்து கொள்வதற்காக பொன்னியின் செல்வன் புத்தகம் மட்டுமல்லாது வேறு சில புத்தகங்களையும் கார்த்தி படித்தாராம். தான், வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் நடித்தது குறித்து பெங்களூருவில் நடைப்பெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கார்த்தி பகிர்ந்து கொண்டார்.
அப்போது, வந்தியத்தேவன் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் புத்தகத்தை முழுமையாக படித்திருக்க வேண்டும் என்றும், 3000 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை 300 பக்க கதை கொண்ட படமாக சுருக்கியது தனக்கு மிகவும் கடினமாக இருந்ததாகவும் கூறினார்.
மணிரத்னமிடம் மாட்டிக்கொண்ட கார்த்தி!
ஒவ்வொரு முறை படப்பிடிப்பிற்கு வருவதற்கு முன்பும், படத்தின் ஸ்கிரிப்டையும் புத்தகத்தில் உள்ள சீனையும் படித்து விட்டுத்தான் கார்த்தி படப்பிடிப்பிற்கே செல்வாராம். அப்படி ஒரு முறை செல்லும் போது, படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு காட்சி குறித்து மணிரத்னமிடம் கார்த்தி சந்தேகம் கேட்டாராம். இதைக்கேட்ட இயக்குநர், “இது புத்தகத்தில் இடம் பெற்ற காட்சியா, அல்லது ஸ்கிரிப்டில் உள்ள காட்சியா?” என கேட்பாராம். சில சமயங்களில், “புத்தகம் படிப்பதை நிறுத்திவிட்டு ஸ்கிரிப்டை படி..” என கார்த்தியிடம் மணிரத்னம் கூறுவாராம். இப்படி பல சமயங்களில் புத்தகத்தை படித்து விட்டு இயக்குநரிடம் மாட்டிக்கொண்டுள்ளதாக, கார்த்தி பெங்களூருவில் நடைப்பெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கரிகாலச்சோழன் குறித்து கார்த்தி:
கார்த்தி நடித்துள்ள வந்தியத்தேவன் கதாப்பாத்திரம், பல ஊர்களுக்குச் சென்று பல தேசத்து மக்களுடன் உரையாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதை ஆழ்ந்து புரிந்து கொள்ள சில பயணக்கட்டுரைகளையும் சிலப்பதிகாரத்தையும் படித்ததாக கார்த்தி கூறினார்.
தொடர்ந்து பேசிய கார்த்தி, கரிகாலச்சோழன் குறித்தும் பேசினார் தான் சிறுவயதில் கரிகாலச்சோழன் குறித்த கதைகளை கேட்டபோது அவரை வெறும் வீரம் நிறைந்த இளவரசன் என்றுதான் நினைத்ததாகவும் ஆனால், இப்போது புத்தகத்தை படித்தவடன்தான் அவர் ஒரு அழகான காதலர் என்பதை புரிந்து கொண்டேன் எனவும் கூறினார். மேலும், நீங்களும் புத்தகத்தை படித்தால், கரிகாலச்சோழன் உண்மையிலேயே யார் என்பதை புரிந்து கொள்வீர்கள் என்றும் கூறினார். நடிகர் விக்ரமும் பொன்னியின் செல்வன் புத்தகங்களை படித்ததாக கார்த்தி குறிப்பிட்டார்.
பொன்னியில் செல்வன் 2 ரிலீஸிற்கு ரெடியா மக்களே?
சென்னையில், ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கிய சோழர்களில் ப்ரமோஷன் பயணம், வரும் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கோவை, டெல்லி, கொச்சின், மும்பை, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட முக்கியமான நகரங்களில் படத்திற்கான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர்-நடிகைகள் கலந்து கொண்டனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என மொத்தம் ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. படக்குழுவின் ப்ரமோஷன் பணிகளால், படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.