தியேட்டர் கட்டினால் என்னோட அம்மா பெயர் தான் வைப்பேன் - காமெடி நடிகர் கஞ்சா கருப்பு
தியேட்டர் கட்டப்போறேன்! தியேட்டர் கட்டினால் அதற்கு எனது அம்மா பெயர் "தனலட்சுமி சினிமா டாக்கீஸ்" என்று வைக்க போறேன் - கஞ்சா கருப்பு
கள்ளக்குறிச்சி தனியார் திரையரங்கில் திரைப்படம் பார்க்க வந்த நடிகர் கஞ்சா கருப்பு தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி கூறிய சுவாரசியத் தகவலை பகிர்ந்துள்ளார். கள்ளக்குறிச்சியில் உள்ள மகாலட்சுமி திரையரங்கில் சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படத்தை பார்ப்பதற்காக, நடிகர்கள் ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி ஆகியோருடன், நடிகர் கஞ்சா கருப்பு வந்திருந்தார்.
அப்போது, கஞ்சா கருப்பு கூறியதாவது:
வாழ்க்கையில நான் எல்லாத்தையும் பார்த்துவிட்டேன். என் மனைவி மருத்துவர், புதியதாக மருத்துவமனை கட்டி இருக்கேன். அதில் என்னுடைய மனைவி மருத்துவம் பார்த்து வருகிறார். இன்னும் நான் தியேட்டர் கட்டவில்லை, அடுத்து தியேட்டர் கட்டப்போறேன். தியேட்டர் கட்டினால் அதற்கு எனது அம்மா பெயர் "தனலட்சுமி சினிமா டாக்கீஸ்" என்று வைக்கப்போறேன். அதில் முதன்முதலா தம்பி ரோபோ சங்கர் படத்தைத் தான் வெளியிடபோகிறேன் என்றார் அவர்.
சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தை காண வந்த நடிகர் ரோபோ சங்கரை சூழ்ந்துகொண்டு, செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அப்போது கஞ்சா கருப்பு 'தம்பி ரோபோ சங்கருக்கு யாருடைய வாய்ஸ் செட்டாகுதோ இல்லையோ, கேப்டன் விஜயகாந்த் சாரோட வாய்ஸ் அப்படியே செட் ஆகும் என்று சொன்னவுடன் ரோபோ சங்கர் கேப்டன் விஜயகாந்த் குரலில் பேசி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.
கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, மீனாட்சி சௌத்ரி, சத்யராஜ், கிஷன் தாஸ், ஜான் விஜய், தலைவாசல் விஜய், லால், ரோபோ சங்கர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் சிங்கப்பூர் சலூன் (Singapore Saloon). வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்த நிலையில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. விவேக் மெர்வின் இசையமைத்துள்ள சிங்கப்பூர் சலூன் படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.