Aishwarya Rajesh: பெண்களுக்கு என்ன தீட்டு? எந்த கடவுள் சொல்லுச்சு? பத்திரிக்கையாளர் சந்திப்பில் டென்ஷனான ஐஸ்வர்யா ராஜேஷ்..!
கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான் என தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
கடவுள் எல்லோருக்கும் ஒன்றுதான் என தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் 2021 ஆம் ஆண்டு ஜோ பேபி இயக்கத்தில் வெளியான படம் தி கிரேட் இந்தியன் கிச்சன் படம். சூரஹ் வெஞ்சுரமுடு, நிமிஷ சஜயன் நடித்த இப்படம் அந்த ஆண்டில் சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்ட படமாக அமைந்தது. பெண்களின் இல்லற வாழ்வில் சுதந்திரம் கொடுக்கப்படுகிறது என ஆண்கள் நினைத்துக் கொண்டு அடிமை படுத்தும் அவலத்தையும், பெண்களது நிலைமையை புரிந்து கொள்ளாது ஆணாதிக்கம் நடப்பதையும் இப்படம் வெளிப்படையாக பேசியது.
இந்த படம் இப்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் முன்னணி கேரக்டரில் நடிக்க ஆர்.கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் முதலில் கடந்தாண்டு டிசம்பர் 29 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. அதற்கு காரணம் டிசம்பர் 30 ஆம் தேதி ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த மற்றொரு படமான டிரைவர் ஜமூனா வெளியாகியிருந்தது.
View this post on Instagram
இந்நிலையில் தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதே தேதியில் ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த “ரன் பேபி ரன்” படமும் வெளியாகவுள்ள நிலையில், இரண்டு படங்களின் மேலும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஐஸ்வர்யா ராஜேஷ், “நான் இந்த படத்தை என் நெருங்கிய நண்பர்களுக்கு போட்டுக் காட்டிய போது, அதில் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண் தன் வருங்கால கணவரிடம் உங்க வீட்டுலையும் இப்படித்தான் பண்ணுவாங்கலான்னு கேட்டுச்சு.. அந்த அளவுக்கு ஆணாதிக்கம் என்பது எல்லா இடத்துலேயும் இருக்கு. குறிப்பாக ஊர் பக்கம் நிறைய இருக்கு” என தெரிவித்தார்.
மேலும், “பெண்களின் வாழ்க்கை சமையலறையில் மட்டுமே முடியாமல், அவர்களின் திறமைகள் வெளியே வர வேண்டும். திராவிட ஆட்சியில் பெண்களுக்கு சுதந்திரம் இருக்குன்னு நினைக்கிறேன். கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான். ஆண், பெண் வித்தியாசம் எல்லாம் இல்லை. என்னை பொறுத்தவரைக்கும் எந்த கடவுளும், என் கோயிலுக்கு இவங்க வரக்கூடாது, அவங்க வரக்கூடாதுன்னு சொல்லல. இது நம்ம உருவாக்குனது தான். ஏதாவது ஒரு கடவுள் சொல்லிருக்காரா சொல்லுங்க?” என ஊடகத்தினரிடம் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், “எந்த கடவுளும் மாதவிடாய் சமயத்துல கோயிலுக்கு வரக்கூடாது, இதை செய்யக்கூடாது என நான் ஒரு படத்துல கூட சொல்லிருப்பேன்.இதையெல்லாம் நாம தான் உருவாக்குனோம். நான் எப்போதும் இவற்றையெல்லாம் நம்புவது இல்லை” என தெரிவித்துள்ளார்.