Vijay Sethupathi Exclusive: ’முதலமைச்சரோட மெச்சூரிட்டி பிடிச்சிருக்கு!’ - விஜய் சேதுபதியின் Fanboy தருணங்கள்
அண்மையில் சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் எனக்கு ரொம்பவும் பிடிச்சிருந்தது.
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி என அடுத்தடுத்த படங்களின் ரீலீஸுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன. இதுதவிர கைவசம் 11 படங்களின் படப்பிடிப்பில் படுபிசியாக இருப்பவரை ABP நாடு சார்பாக வளசரவாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தோம், ஜாலி கேலி கேள்விகள், அரசியல் கேள்விகள் என அனைத்தையும் அசால்ட் சேதுவாக எதிர்கொண்டார் விஜய் சேதுபதி. ‘மக்கள் செல்வன்’ உடனான நேர்காணலின் ஒரு குட்டி பகுதி கீழே...
முதலமைச்சர் ஸ்டாலினின் நூறு நாள் ஆட்சியை எப்படிப் பார்க்கறிங்க?
சட்டப்பேரவையில் நடக்கறதையெல்லாம் நான் யூட்யூப் வீடியோக்கள்ல பார்ப்பேன்.நிஜமாவே ரொம்ப நல்லா இருந்தது. அவங்க பேசுறது எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. சட்டசபையில் நடப்பதையெல்லாம் ரொம்ப கம்மியாப் பாத்துருக்கேன். சட்டசபையில் சண்டை போடுற வீடியோக்கள்தான் நிறைய வரும். சாதாரணமா அவங்க பேசிக்குறது ரொம்ப நல்லாருக்கு, ரொம்ப ஆரோக்கியமா இருக்கு. சட்டசபையில் நடக்கும் குட்டிக் குட்டி வீடியோக்கள் எல்லாம் வருது. எதிர்கட்சி கேள்வி கேட்கறாங்க, ஆளும் கட்சி பதில் சொல்லறாங்க, கேட்க நல்லாவும் இருக்கு. ஒரு சுவாரசியமான படமா இருக்கு. அண்மையில் சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் எனக்கு ரொம்பவும் பிடிச்சிருந்தது.பாடபுத்தகங்கள்ல முன்னாள் முதலமைச்சரோட படம் இருக்கு அதையெல்லாம் என்ன செய்யலாம்னு கேள்வி வருது. அதற்கு ஆகுற 13 கோடி ரூபாய் செலவை மாணவர்களுக்குத் தேவையான விஷயங்களுக்கு உபயோகிக்கலாம், பாடபுத்தகங்களில் முன்னாள் முதலமைச்சர் புகைப்படங்களே இருக்கட்டும்னு முதலமைச்சர் சொன்னதா அன்பில் மகேஷ் சொல்லறாரு.இதுமாதிரி ஒரு அரசியல் ரொம்ப நாளா யாருமே பார்க்கலை.
அம்மா உணவகத்தை கட்சிக்காரங்களே அடிச்சு உடைச்சபோது உடனடியாக அதனை சரி செய்து வன்முறையில் ஈடுபட்டவங்களை கைது செய்வது எல்லாம் அற்புதமான விஷயம்.இதெல்லாம் மெச்சூரிட்டி, இந்த மெச்சூரிட்டி இல்லாம ஒரு முதலமைச்சர் எப்படி ஆட்சி நடத்த முடியும். அவரோட பண்பு பிடிச்சுருக்கு. இது இல்லாம அமைச்சர் பி.டி.ஆர். ஒவ்வொரு கேள்விக்கும் விளக்கமா பதில் சொல்லுறதும் பார்க்கறேன் நல்லாயிருக்கு..
அப்போ வெள்ளை அறிக்கையெல்லாம் பார்த்திருக்கிங்களா?
’அது என்னனு புரியலை ஆனால் அறிக்கையெல்லாம் பார்த்தேன். இது தவிர அண்மையில் நேரத்தை எப்படிச் செலவிடனும் என்று பேரவையில் முதலமைச்சர் அன்பாக அமைச்சர்களைக் கண்டிச்சு இருந்தார். யாருக்கும் ஆதரவா நான் இதைச் சொல்லலை ஆனா சட்டப்பேரவையில் நடக்கிறதை தினமும் சும்மா பாருங்க..நல்லாயிருக்கு’
இது போல் இன்னும் சுவாரஸ்யமான கேள்விகள்... விறுவிறுப்பான பதில்கள்... கலகலப்பாக நகரும் நிமிடங்கள் என விஜய் சேதுபதி பேசிய முழு வீடியோவைக் காண கீழே உள்ள யூடியூப் பக்கத்தை கிளிக் செய்து பாருங்கள்!