Fahadh Faasil: ஓடிடி ஆதரவு இல்லை.. மலையாள சினிமாவின் வளர்ச்சிக்கு காரணம் இதுதான்.. ஃபகத் ஃபாசில் பளிச்!
Fahadh Faasil: மற்ற மொழிப் படங்களைக் காட்டிலும் மலையாளப் படங்களுக்கு அதிக கவனம் கிடைப்பதற்கான காரணத்தை நடிகர் ஃபகத் ஃபாசில் விளக்கியுள்ளார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மலையாளத்தில் எப்படியான படங்களை எடுத்தாலும் அதைப் பார்க்க ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று ஃபகத் ஃபாசில் (Fahadh Faasil) தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்த 100 கோடி இலக்கை எட்டிய மலையாள படங்கள்
2024ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படங்களுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. பிரேமலு, மஞ்சுமெல் பாய்ஸ், ப்ரம்மயுகம், ஆடு ஜீவிதம், ஆவேஷம் என அடுத்தடுத்தப் படங்கள் இந்தியளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இதில் பிரேமலு, மஞ்சுமெல் பாய்ஸ், ஆடு ஜீவிதம் மற்றும் ஆவேஷம் ஆகிய நான்கு படங்கள் ரூ.100 கோடி வசூல் இலக்கைத் தாண்டியுள்ளன. மலையாள சினிமாவில் இவ்வளவு பெரிய வளர்ச்சி பற்றியும் மலையாளப் படங்களுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடம் கிடைத்து வரும் வரவேற்பு குறித்தும் தான் சினிமா வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இப்படியான நிலையில் மலையாள சினிமாவின் வளர்ச்சிக்கான காரணத்தை தெளிவாக விளக்கியுள்ளார் நடிகர் ஃபகத் ஃபாசில்.
‘எங்களை ஆதரிக்க ஒரு ஓடிடி தளம் கூட கிடையாது’
சமீபத்தில் தனியார் ஊடகத்துடனான நேர்காணல் ஒன்றில் பேசிய ஃபகத் ஃபாசில் மலையாள சினிமாவின் சமீப கால வளர்ச்சி குறித்து பேசிய போது இப்படி கூறியுள்ளார் “ மலையாளப் படங்களுக்கு எல்லா தரப்பு ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. திரையரங்குகளில் 40 முதல் 50 சதவீதம் வரை வருமானம் அதிகரித்துள்ளது. மலையாள திரைத்துறையிலும் இந்த அசாத்தியமான வளர்ச்சி பற்றிதான் தற்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை இந்த வளர்ச்சிக்கு சில முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. என்னதான் மலையாள சினிமாவுக்கு அதிகப்படியான வரவேற்பு கிடைத்தாலும் எங்கள் படங்களுக்கு இதுவரை எந்த ஒரு ஓடிடி தளமும் நிலையான ஆதரவைத் தரவில்லை. மலையாள படங்கள் தவிர்த்து பிற மொழியில் 80 சதவிகிதப் படங்கள் வெளியாவதற்கு முன்பே ஓடிடி தளங்களுக்கு விற்கப்பட்டு விடுகின்றன. ஆனான் நாங்கள் ஒரு படத்தை எடுத்து அதை திரையரங்கில் வெளியிட்டு நிரூபிக்க வேண்டும். அதன் பின்னரே எங்கள் படங்களை வாங்க ஓடிடி தளங்கள் முன் வருகின்றன.
இப்படியான ஒரு நெருக்கடியான சூழலை சமாளிக்க எங்களை நாங்கள் முடிந்த அளவிற்கு சுய சார்புடன் வைத்துக் கொள்ள பழகியிருக்கிறோம். எங்கள் படங்களை கவனிக்கப்பட வேண்டும் என்றால் அவை பொதுவெளியில் சத்தம் எழுப்பி கவனத்தை ஈர்க்க வேண்டும். அதனால் தான் நாங்கள் எங்களை கதைகளை அதிகம் சார்ந்திருக்கிறோம். நல்ல கதைகள் தான் எங்கள் மீதான கவனத்தை பெற்றுத் தரும் என்பதில் இந்த துறையில் இருக்கும் ஒவ்வொருவரும் உறுதியாக இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான பிரேமலு , மஞ்சுமெல் பாய்ஸ், ப்ரமயுகம், ஆடு ஜீவிதம், ஆவேஷம், வருஷங்களுக்கு சேஷம் இந்தப் படங்கள் எல்லாமே ஒன்றுக்கு ஒன்று முழுவதுமாக வெவ்வேறு கதைகள். அதனால் தான் அவை மக்களை கவர்ந்திருக்கின்றன.
‘ஐந்து ஆண்டுகளுக்கு என்ன வேண்டுமானாலும் எடுக்கலாம்'
சினிமாவில் இருக்கும் என்னுடைய நண்பர்களிடம் நான் சொல்வதுண்டு. அடுத்த ஐந்து வருஷத்திற்கு என்ன தோன்றுகிறதோ அதைப் படமாக எடுங்கள் என்று. மறுபடியும் பிளாக் & ஒயிட்டில் எடுக்க வேண்டுமா எடுங்கள். வசனம் இல்லாமல், பரிசோதனை முயற்சிகள் என்ன வேண்டுமானாலும் செய்து பார்க்க இதுதான் சரியான நேரம் . கதை நன்றாக இருக்கும் பட்சத்தில் அதை பார்க்க ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். யோசிப்பதை விட்டுவிட்டு படங்களை எடுப்பது மட்டும் தான் நாங்கள் செய்ய வேண்டிய வேலை” எனப் பேசியுள்ளார்.