Aamir Khan: தோணும்போது நடிப்பேன்... உற்சாக பாங்ரா நடனத்துடன் மனம் திறந்த ஆமிர் கான்!
ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ஆமிர் கான், இந்த விழாவில் உற்சாகமாக பஞ்சாபிய பாரம்பரிய நடனமான பாங்கரா ஆடினார்.
நடிகர் ஆமீர் கான் தான் உணர்வுப்பூர்வமாக தயாராக இருக்கும்போது அடுத்த படம் செய்வேன் எனக் கூறியுள்ளார்.
எதிர்பார்ப்புகளை ஏமாற்றி படம்
லால் சிங் சத்தா படத்தின் படு தோல்விக்குப் பிறகு நடிகர் ஆமீர் கான் எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார். 1994ஆம் ஆண்டு டாம் ஹேங்ஸ் நடிப்பில் வெளியாகி ஆறு ஆஸ்கர் விருதுகளைக் குவித்த திரைப்படம் ‘ஃபாரஸ்ட் கம்ப்’. இந்தப் படம் சென்ற ஆண்டு ஆமீர் கான் - கரீனா கபூர் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.
இப்படம் சென்ற ஆண்டு வெளியாகி ஆமீர் கானின் நடிப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் பாராட்டுக்களைப் பெற்றாலும் ஒட்டுமொத்தமாக இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் பாய்காட் பாலிவுட் பிரச்சாரம் உள்ளிட்ட பல காரணங்களால் இப்படம் வசூல்ரீதியாக படுதோல்வியைத் தழுவியது.
அடுத்த படம் எப்போது?
அமீர் கானின் மிக மோசமான படுதோல்விப் படங்களின் வரிசையில் இப்படமும் இடம்பெற்றது. மேலும் லால் சிங் சத்தா படத்தின் படுதோல்விக்குப் பிறகு இன்று வரை ஆமீர் கான் தன் அடுத்த படம் குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. கௌரவக் கதாபாத்திரத்தில் நடிகை கஜோலின் சலாம் வெங்கி படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தான் தன் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதை விரும்புவதாகவும், தான் உணர்வுப்பூர்வமாக தயாராக இருக்கும்போது அடுத்த படம் குறித்து அறிவிப்பேன் என்றும் ஆமீர் கான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ‘கேரி ஆன் ஜட்டா 3’ எனும் பஞ்சாபி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ஆமீர் கான், இந்த விழாவில் உற்சாகமாக பஞ்சாபிய பாரம்பரிய நடனமான பாங்கரா ஆடி மகிழ்ந்த வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டாகின.
.#AamirKhan welcomed in full Punjabi style as be arrives for the trailer launch of #CarryOnJatta3 pic.twitter.com/bTgx5qOhuM
— Faridoon Shahryar (@iFaridoon) May 30, 2023
இந்நிலையில், இப்பட விழாவில் அமீர் கானின் அடுத்த படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஆமீர் கான், "இப்போதைக்கு நான் எந்தப் படத்தையும் செய்ய முடிவு செய்யவில்லை. நான் இப்போது என் குடும்பத்துடன் நேரத்தை செலவிட விரும்புகிறேன். நான் ஒரு படம் செய்ய உணர்வுப்பூர்வமாகத் தயாராக இருக்கும்போது நிச்சயம் நடிப்பேன்” எனப் பேசியுள்ளார்.
அதிகம் வசூலைக் குவித்த ஸ்டார்
இறுதியாக கடந்த 2018ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் உடன் ஆமீர் கான் இணைந்து நடித்த தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான் படமும் படுதோல்வியைத் தழுவியது. ஆனால் 2016ஆம் ஆண்டு வெளியான ‘டங்கல்’ திரைப்படம் இந்தியாவின் ஆல்டைம் வசூல் சாதனைப் படைத்த படங்களின் பட்டியலில் இன்று வரை முன்னிலை வகித்து வருகிறது.
உலக அளவில் 2000 கோடிகள் வரை வசூலித்து இப்படம் இன்று வரை உலக அளவில் அதிகம் வசூலித்த திரைப்படம் எனும் சாதனையைத் தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.