National Film Awards 2023: சினிமாவிற்கான 69வது தேசிய விருதுகள்.. தனுஷ், சிம்பு, ஆர்யா இடையே கடும் போட்டி, 5 மணிக்கு அறிவிப்பு
2021ம் ஆண்டு வெளியான இந்திய சினிமாக்களுக்கான தேசிய விருதுகள் இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளன.
2021ம் ஆண்டு வெளியான இந்திய சினிமாக்களுக்கான தேசிய விருதுகள் இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளன.
தேசிய விருதுகள்:
இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டு வழங்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகள் அடிப்படையிலான திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 69-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்வில் தேசிய விருது வெற்றியாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட உள்ளன.
69வது தேசிய விருதுகள்:
2021-ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான தேசிய விருதுகள் தான் இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளன. அதில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகர் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை, சூர்யா மற்றும் மணிகண்டன் நடித்த ஜெய் பீம், தனுஷ் நடித்த கர்ணன், சமுத்திரக்கனி இயக்கிய விநோதய சித்தம் மற்றும் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு ஆகிய திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சிறந்த திரைப்பட விருது?
குறிப்பாக ஜெய் பீம், கர்ணன் மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய திரைப்படங்களில் ஏதேனும் ஒன்று, சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இயக்குனர்களில் ஞானவேல், மாரி செல்வராஜ் ஆகியோரில் ஒருவருக்கு விருது கிடைக்கலாம். மேலும் இசையமைப்பாளர்களில் அனிருத்திற்கு விருது கிடைக்கலாம் என கணிக்கப்படுகிறது. இதனால், தமிழ் திரையுலகத்திற்கு இந்த ஆண்டு கூடுதல் விருதுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக நடிகர்கள் சூர்யா, தனுஷ், ஆர்யா, மணிகண்டன் ஆகியோர்களுக்கு விருது கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மற்ற மொழியில் எப்படி?
தெலுங்கு திரையுலகை பொறுத்தவரையில் ‘புஷ்பா’ படம் போட்டியில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியில் பெரிய அளவிலான போட்டிகள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது. காரணம் அந்த ஆண்டில் வெளியான சூர்யவன்ஷி மற்றும் 83 ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே அந்த ஆண்டு வசூல் ரீதியாக ஓரளவிற்கு வரவேற்பை பெற்ற படங்களாக அமைந்துள்ளன. அதேநேரம், மலையாள படத்தில் மின்னல் முரளி, தி கிரேட் இந்தியன் கிட்சன், மாலிக் மற்றும் ஹோம் போன்ற பல வெற்றி படங்கள் வெளியாகியுள்ளன. இதனால் மலையாள திரைப்படங்கள் அதிக விருதுகளை வெல்ல வாய்ப்புள்ளது. இதனால், தேசிய சினிமா விருதுகளை வெல்லப்போவது யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.