48 Years Of Ilaiyaraaja: ராசய்யா இளையராஜாவாக மாறிய கதை இதுதான்.. பெயரை மாற்றிய பிரபலம்!
Ilaiyaraaja: இசைஞானி, ராகதேவன், ராசய்யா என ரசிகர்களால் கொண்டாடித் தீர்க்கப்படும் இளையராஜாவின் இயர்பெயர் என்ன தெரியுமா? அவரது பெயரை இளையராஜா என மாற்றியமைத்தது இவர் தான்!
அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் இளையராஜா (Ilaiyaraaja) திரைத்துறைக்கு வருகை தந்து இன்றுடன் 48 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
முதல் படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்த ராஜா
பிரபல நடிகர் சிவக்குமார் - மறைந்த நடிகை சுஜாதா நடிப்பில் 1976ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அன்னக்கிளி. கிராமத்துப் பின்னணியில் வெளியாகி சக்கைபோடு போட்டு இப்படம் ஹிட் அடித்ததற்கு மிகப்பெரும் காரணம் இளையராஜாவின் இசை. தன் முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்த இளையராஜா அதன் பின் தொட்டதெல்லாம் பொன்னாக, தன் இசையால் உலகம் முழுவதுமுள்ள தமிழ் நெஞ்சங்களை ஆட்சி செய்யத் தொடங்கினார். இந்த 48 ஆண்டுகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா, பத்ம விபூஷண், பத்ம பூஷண் தொடங்கி தேசிய விருதுகள் தொடங்கி உலகளாவிய விருதுகள் வரை தன் இசைப்பயணத்தில் ஏராளமான விருதுகளை அள்ளிக் குவித்துள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்களின் வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக இளையராஜாவின் இசை இன்று மாறிப்போயுள்ளது. கருத்தியல்ரீதியான வித்தியாசங்கள், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் தாண்டியும் இளையராஜாவின் இசையைக் கொண்டாடுபவர்கள் இங்கு ஏராளம். இப்படி இசைஞானி, ராகதேவன், ராசய்யா என ரசிகர்களால் கொண்டாடித் தீர்க்கப்படும் இளையராஜாவின் இயர்பெயர் என்ன தெரியுமா? நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு இளையராஜா எனப் பெயர் வந்த காரணம் பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது:
‘என் அப்பா வைத்த பெயர்’
ஒரிஜினலாக என் அப்பா எனக்கு இரண்டு பெயர்கள் வைத்தார். ராஜய்யா மற்றும் ஞானதேசிகன். என்னுடைய ஜாதகத்தைப் பார்த்துவிட்டு அவர் எனக்கு ஞானதேசிகன் எனப் பெயர் வைத்தார். அது வேறு ஆனால் பள்ளியில் சேர்க்கும்போது குட்டியாக இருக்க வேண்டும் என ராஜய்யா என வைத்தார். இங்கு சென்னைக்கு ஹார்மோனியம் எடுத்துக் கொண்டு இசை கற்றுக்கொள்ள தன்ராஜ் மாஸ்டரிடம் வந்தேன்.. அந்தக் காலத்தில் எம்.எஸ்.வி, எஸ்.வி.வெங்கட்ராமன், சி.ஆர்.சுப்புராமன் போன்ற பெரிய சினி மியூசிக் டைரக்டர்களின் இசைக் கலைஞர்கள் எல்லாம் தன்ராஜ் மாஸ்டரிடம் தான் ட்ரெய்னிங் எடுத்துக் கொண்டு வந்து பின் சினிமாவில் சென்று சேருவார்கள்.
இளையராஜாவானது இப்படிதான்..
அவரிடம் நான் வெஸ்டர்ன் மியூசிக் கற்றுக்கொள்ள சென்றபோது, “உன் பேர் என்ன?” என்றார். நான் ராஜய்யா என்றேன். பின் அவர் “ராஜய்யா நன்றாக இல்லை, ராஜானு வச்சிக்கோ” என்று பெயரை மாற்றினார். அவங்கவங்க வந்து மாற்றிவிட்டுப் போனார்கள். பின் பட வாய்ப்பு கிடைத்ததும் பாட்டெல்லாம் கம்போஸ் செய்தாச்சு. பஞ்சு அருணாச்சலம், நான் கம்போஸ் பண்ண பாடல்களுக்காக கதை எழுதி, அன்னக்கிளி எனும் படத்தினை எடுக்கிறார். இதுதான் உண்மையாகவே நடந்தது. "என்ன பாடல் கம்போஸ் பண்ணி இருக்க?" என்றார். என்னிடம் ஹார்மோனியம் கூட இல்லை, அவர் ஒரு லாட்ஜில் இருந்தார். அங்கு ஒரு டேபிள் இருந்தது. அதில் தாளம்போட்டுக் கொண்டே, மச்சான பாத்தீங்களா, அன்னக்கிளி உன்ன தேடுதே, சுத்தச் சம்பா பச்ச நெல்லு குத்த தான் வேணும் என வரிசையாக பாடினேன்.
அதற்கு அவர், நான் இப்போ காமெடி படமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். அதுக்கு இவை சரிபட்டு வராது. இந்தப் பாடல்கள யூஸ் பண்றதுக்காகவே நான் ஒரு படம் எடுக்கிறேன்” என சொல்லிவிட்டு அன்னக்கிளி படம் எடுக்கிறார். அந்தப் பாடல்களுக்காக அன்னக்கிளி படம் எடுத்துவிட்டு உன்னை இசையமைப்பாளராக போடுகிறேன் என்றார். அதற்கு முன் தான் நான் இசையமைப்பாளர் கோவர்தன் என்பவருடன் வேலை செய்தேன். அவர் "நீயும் வேலை செய், நாம் கோவர்தன் - ராஜா என இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் பெயர் போட்டுக் கொள்ளலாம்” என்றார். வரப்பிரசாதம் எனும் படத்தில் நாங்கள் வேலை செய்து முடித்துவிட்டோம்.
“சார் கோவர்தன் - ராஜா எனப் பெயர் போடுங்கள்” என்றேன். அதற்கு பஞ்சு அருணாச்சலம், “நான் உனக்கு தான் வேலை செய்கிறேன். நான் எதற்கு இப்படிப் பெயர் போட வேண்டும்? ராஜானு பெயர் போட்டுடலாம்” என்றார். நான் அதற்கு “ஏற்கெனவே ஏ.எம்.ராஜா இருக்கிறார். ரசிகர்களுக்கு குழம்பும்” என்றேன். “அப்போ என்ன போடலாம்?” என அவர் கேள்வி எழுப்பினார். “பாவலர் சகோதரர்கள் எனப் போடலாம், நாங்கள் ஏற்கெனவே அந்தப் பெயரில் டிராமா மியூசிக், எஸ்.பி.பிக்கு கச்சேரி இவையெல்லாம் செய்து வருகிறேன்” என்றேன்.
அதற்கு பஞ்சு அருணாச்சலம், இது ரொம்ப பழைய பெயராகத் தெரிகிறது. ஏற்கெனவே ஒரு ராஜா இருக்கிறார். நீ இளையராஜா என வைச்சிக்கோ” என்றார். சரி நீங்க கூப்பிடறதுனா கூப்பிட்டுக்கோங்க” என்றேன்” எனப் பகிர்ந்துள்ளார். இன்று இசைராஜாவாக ரசிகர்களின் மனங்களை ஆளும் ராஜய்யாவுக்கு இளையராஜா என அடையாளப்படுத்தி, அவரை திரையில் அறிமுகப்படுத்தியவர் பஞ்சு அருணாச்சலம் ஆவார்.