30 years of Gentlemen : பிரம்மாண்டமும், விறுவிறுப்பும் சேர்ந்த மேஜிக்... 30 ஆண்டுகளை கடந்த 'ஜென்டில்மேன்'
அதிரடி ஆக்ஷன், சஸ்பென்ஸ், நகைச்சுவை, அழுத்தமான பிளாஷ்பேக் என ஒரு கமர்சியல் படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களையும் கனகச்சிதமாக வகுத்து ரசிகர்களை படம் முழுக்க ஆக்கிரமித்த படம் ஜென்டில்மேன்.
பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் டிப்ளமோ முடித்த ஒரு இளைஞர் பணிநீக்கம் காரணமாக வேலையை இழந்து சினிமா மீதும் நாடங்கங்கள் மீதும் இருந்த மோகத்தால் எஸ்.ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக இருந்து பின்னர் ஒரு சில படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய பிறகு முதல் முறையாக கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் இயக்குநர் அவதாரம் எடுத்த ஷங்கரின் முதல் படம் 'ஜென்டில்மேன்'. இப்படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
அதிரடி ஆக்ஷன், சஸ்பென்ஸ், நகைச்சுவை, அழுத்தமான பிளாஷ்பேக் என ஒரு கமர்சியல் படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களையும் கனகச்சிதமாக வகுத்து ரசிகர்களை படம் முழுக்க ஆக்கிரமித்த படம் ஜென்டில்மேன். அர்ஜுன், மதுபாலா, நம்பியார், மனோரமா, வினீத், சரத்ராஜ் என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மிகவும் கனமான ரோல் கொடுத்தது படத்திற்கு மேலும் வலுசேர்த்தது. கவுண்டமணி, செந்தில் காமெடி படத்தின் அங்கங்கே வந்தாலும் கலகலப்பை ஏற்படுத்தியது என்றாலும் சில எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றன.
கிச்சாவாக அர்ஜுன் ஒரு சஸ்பென்ஸ் பாத்திரமாகவே கடைசி வரையில் பயணித்தார். முதல் படத்திலேயே ஏ.ஆர். ரஹ்மான் தான் இசையமைக்க வேண்டும் என்ற பிடிவாதமான முடிவால் அதுவரையில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கம்ப்யூட்டர் இசையமைப்பாளராக மட்டுமே பார்க்கப்பட்ட ஏ.ஆர். ரஹ்மான் சிறியவர் முதல் பெரியவர்கள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து இழுத்த ஒரு படமாக அமைந்தது ஜென்டில்மேன். மேலும் நேர்த்தியான ஒளிப்பதிவு செய்த ஜீவாவுக்கும் கூர்மையான வசனங்களின் மூலம் வசியம் செய்த அனுபவ எழுத்தாளர் பாலகுமாரனின் பங்களிப்பும் பாராட்டை குவித்தது.
'சிக்கு புக்கு ரயிலே...' என்ற ஒற்றை பாடலில் நடனமாடிய பிரபுதேவா ஒரு ஹீரோவாகும் வாய்ப்பை பெற வழிகாட்டியாக அமைந்தது ஜென்டில்மேன் திரைப்படம். அந்த வழியிலேயே பல புதுமையான திறமைகளான ஜி.வி. பிரகாஷ், சுரேஷ் பீட்டர்ஸ், ஷாகுல் ஹமீது உள்ளிட்டோரையும் அறிமுகப்படுத்தியது இப்படம் என்ற பெருமையை கொண்டுள்ளது.
உயர்கல்வியில் இடஒதுக்கீடு, அதனால் ஏற்பட்ட உயிர் பலி என்பதை மையப் பொருளாக வைத்து ஒரு திரைக்கதையை உருவாக்கி அதன் மூலம் முதல் படத்திலேயே வெற்றிக்கனியை சுவைத்தவர் இன்று தமிழ் சினிமா உலகமே பிரமாண்ட இயக்குநர் என கொண்டாடும் ஷங்கர்.
இதே 1993ம் ஆண்டு ஜென்டில்மேன் படத்தோடு போட்டி போட்டு கொண்டு வெளியான மிக பெரிய திரை நட்சத்திரங்களான ரஜினியின் எஜமான், உழைப்பாளி, கமல்ஹாசனின் கலைஞன், மணிரத்தனத்தின் திருடா திருடா உள்ளிட்ட படங்களின் வெற்றிக்கு நடுவில் தனித்து வெற்றியடைந்தது 'ஜென்டில்மேன்' திரைப்படம். 30 ஆண்டுகளை கடந்தும் இது போன்ற ஒரு ஸ்வாரஸ்யமான படம் மீண்டும் ஷங்கரிடம் இருந்து வராதா என காத்திருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.