Salem ADMK Candidate: சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு - யார் இந்த விக்னேஷ்?
Salem AIADMK Candidate Vignesh: மாநில அம்மா பேரவை துணைச் செயலாளருமான விக்னேஷ் சேலம் நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Salem Lok Sabha Constituency AIADMK Candidate Vignesh: தமிழ்நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குறிப்பாக சேலம் நாடாளுமன்ற தொகுதியை கைப்பற்ற வேண்டும் என திமுக, அதிமுக கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவில் வருகிறது. இந்த நிலையில் முதற்கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.
சேலத்தில் அதிமுக:
அதிமுகவை பொறுத்தவரை சேலம் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் ஆகும். எனவே அதனை கைப்பற்ற வேண்டும் என அதிமுகவினர் செயல்பட்டு வருகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 10 தொகுதிகளை வென்றது. எனவே சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை என மீண்டும் நிரூபிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.
அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர்:
அதிமுகவை பொருத்தவரை முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளருமான செம்மலை நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு படித்த இளைஞர் ஒருவரை நிறுத்த வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி, சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மணியின் உறவினரும், ஒன்றிய அவைத் தலைவர் பரமசிவத்தின் மகனும், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளருமான விக்னேஷ் நாடாளுமன்ற தேர்தல் அதிமுக வேட்பாளராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.