மேலும் அறிய
தமிழ்நாட்டில் சின்னம் வரையக்கூட ஆளில்லாத கட்சி பாஜக - திருமாவளவன்
மோடி, அமித்ஷா சொல்லித்தான் அதிமுக இந்த தேர்தலில் புறக்கணித்துள்ளது - திருமாவளவன்
![தமிழ்நாட்டில் சின்னம் வரையக்கூட ஆளில்லாத கட்சி பாஜக - திருமாவளவன் vikravandi by election BJP is a party that has no man to even draw a symbol in Tamil Nadu Thirumavalavan தமிழ்நாட்டில் சின்னம் வரையக்கூட ஆளில்லாத கட்சி பாஜக - திருமாவளவன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/05/a5b53d199f079f23b5c1f0770fa7fadd1720149410273113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; திருமாவளவன் தேர்தல் பிரச்சாரம்
Source : Other
பாஜக சொல்லித்தான் விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது, தமிழ்நாட்டில் சின்னம் வரையக்கூட ஆளில்லாத பாஜகவை பாமக வளர்த்து விடுகிறது என திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து ஒரத்தூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சு.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேமூர், ஒரத்தூர், தொரவி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். ஒரத்தூர் பகுதியில் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய திருமாவளவன்:
சமூக நீதிக்காக, சங்கப்பரிவார அமைப்புகளை துணிச்சலோடு திமுக எதிர்க்கிறது. திமுகவும் திமுக கூட்டணி இல்லையென்றால் பாஜக தமிழ்நாட்டில் ஒரு பெரிய சக்தியாக வளர்ந்து இருக்கும். தமிழ்நாட்டில் பாஜக வளர்வது பற்றி அதிமுகவுக்கு கவலையில்லை. பாஜகவை, அதிமுக தோளிலே தூக்கி சுமக்கிறார்கள். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு வேட்பாளர்கள் கிடைத்தார்கள் ஆனால் சின்னம் வரையக்கூட தமிழ்நாட்டில் ஆள் இல்லை. பாஜகவில் சின்னம் வரைவதற்கோ, வாக்குச்சாவடியில் உட்காருவதற்கோ ஆள் இல்லை பாமக தான் உதவியது. அதிமுகவும், பாமகவும் பாஜக தமிழ்நாட்டில் வளர்வதற்கு துணைப் போகிறார்கள். பாஜக தமிழ்நாட்டில் வேரூன்ற கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது.
2019இல் இருந்து மோடி எதிர்ப்பை வலுவாக பேசியது திமுக தலைவர் ஸ்டாலின் தான். விடுதலை சிறுத்தைகள் கட்சி மோடியை எதிர்ப்பது என்பது வேறு, திமுக எதிர்ப்பது என்பது வேறு. ஆளும் கட்சிக்கும், ஆண்ட கட்சிக்கும் டெல்லியின் தயவு தேவைப்படும். பாஜக வளர்வது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஆபத்தானது. இன்றைக்கு மோடி அரசியலமைப்புச் சட்டத்தை வணங்குகிறார் அதற்கு காரணம் இந்தியா கூட்டணி. இந்தியா கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த முறை 303 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக இந்த முறை 63 இடங்களை பறிகொடுத்து 240 இடங்களில் தான் வெற்றி பெற முடிந்தது. இவ்வளவு பெரிய தோல்விக்கு காரணம் பாஜக அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்ற இந்தியா கூட்டணி பிரச்சாரம் தான் காரணம். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தாலும் பல் இல்லாத பாம்பாக, கொல்பில்லாத மாடாகத்தான் இருக்க முடியும். பாஜகவை எதிர்ப்பதாக கூறி அதிமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்தது ஆனாலும் அதிமுகவால் வெற்றி பெற முடியவில்லை. அதிமுக, பாஜக சொல்லித்தான் கூட்டணியில் இருந்து வெளியே வந்திருக்கிறார்கள் என மக்கள் புரிந்து கொண்டார்கள்.
பாமக வெளிப்படையாக பாஜகவோடு கைகோர்க்கிறது. ஆனால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டோம் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த இடைத்தேர்தலில் மக்கள் இதனை புரிந்து கொண்டுள்ளனர். மோடி, அமித்ஷா சொல்லித்தான் அதிமுக இந்த தேர்தலில் புறக்கணித்துள்ளது. இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் 40க்கு 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. ஒவ்வொரு தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்பதை வரலாறாக நாம் பதிவு செய்ய வேண்டும். திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion