Anbumani: திமுகவுக்கு வன்னியர்கள், பட்டியலினத்தவர், முஸ்லிம்கள் வெறும் வாக்கு வங்கி மட்டும்தான்; சாடிய அன்புமணி
மக்களுக்கு திமுக என்ன செய்தது? ஐந்தாண்டு காலத்தில் பட்டியல் சமூகத்திற்கு திமுக செய்தது என்ன ஏதாவது ஒன்றை சொல்ல முடியுமா?- அன்புமணி கேள்வி

திமுக வன்னியர்கள், பட்டியல் சமூக மக்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பார்க்கிறார்கள், எந்த வளர்ச்சி திட்டத்தையும் கொடுக்கவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி சாடியுள்ளார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் மருத்துவர் அன்புச் சோழனை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
''காட்டுமன்னார் கோயிலில் அன்புச் சோழன் வெற்றி பெற்றால் அடுத்த மாதம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முதலமைச்சராக பதவி ஏற்பார். அதற்கு நீங்கள் எல்லோரும் ஆதரவளித்து திமுகவை வீட்டிற்கு அனுப்புங்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது.
திமுக ஆட்சியிலே பெண்களுக்கு அச்சுறுத்தல்
அதிமுக ஆட்சி காலத்தில் பெண்கள் தைரியமாக வெளியில் சென்று வந்தார்கள். ஆனால் திமுக ஆட்சியிலே பெண்களுக்கு அச்சுறுத்தல் நீடிக்கிறது. காரணம் திமுக ஆட்சியில் போதை கலாச்சாரம் அதிகரித்துவிட்டது.
டாஸ்மாக், சாராயம் மட்டுமில்லாமல் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வகையான போதை பொருள் நடமாட்டம் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் அதிகரித்துவிட்டது. இப்படி ஒரு மோசமான ஆட்சியை கொடுத்த ஸ்டாலின் ஆட்சி இனி தமிழ்நாட்டிற்கு தேவை கிடையாது.
நேர்மையான பாமக வேட்பாளர்
பாமக சார்பில் காட்டுமன்னார்கோயில் போட்டியிடும் வேட்பாளர் அன்புச்சோழன் ஒரு நல்ல மருத்துவர் நேர்மையானவர். இந்த காட்டுமன்னார்கோயில் தொகுதியை எடுத்துக் கொள்வோம் இந்த தொகுதியில் ஏதாவது ஒரு வளர்ச்சி இருக்கிறதா? ஏதாவது தொழிற்சாலை இருக்கிறதா? இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இருக்கிறதா? இந்த ஒரு முறை பாமக வேட்பாளர் அன்புச் சோழனுக்கு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் நேர்மையாக இருப்பார் லஞ்சம் வாங்க மாட்டார்.
அதே நேரத்தில் இந்த காட்டுமன்னார்கோயில் தொகுதியின் விசிக வேட்பாளர் அவரைப் பற்றி நான் ஒன்றும் தவறாக சொல்லப் போவது கிடையாது. ஆனால் அவர் வயதானவர். கடைசி நேரத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். திமுகதான் வன்னியர்- பட்டியல் சமூகங்களும் சேர்ந்து விடக்கூடாது என்று நினைக்கிறது திமுக.
மக்களுக்கு திமுக என்ன செய்தது? ஐந்தாண்டு காலத்தில் பட்டியல் சமூகத்திற்கு திமுக செய்தது என்ன ஏதாவது ஒன்றை சொல்ல முடியுமா?
பாமகவில் முதல் மத்திய அமைச்சர் தலித்
பாமகவிற்கு கிடைத்த முதல் மத்திய அமைச்சர் பதவியை, பட்டியல் இனத்தைச் சேர்ந்த தலித் எழில் மலைக்கு கொடுத்தோம். பாமக 1998-லேயே பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை மத்திய அமைச்சராக மாற்றி விட்டது. ஆனால் திமுக அதற்கு அடுத்த ஆண்டு அதாவது 1999-ல்தான் வாய்ப்பு கொடுத்தார்கள். இரண்டாவதாகக் கிடைத்த மத்திய அமைச்சர் வாய்ப்பையும் தலித் ஒருவருக்குத்தான்ன் பாமக வழங்கியது.
பட்டியலின மக்கள் வாக்களித்த காரணத்தால்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், அடுத்த நாடாளுமன்ற தேர்தல் என அனைத்திலும் திமுக வெற்றி பெற்றது. திமுகவில் பட்டியல் இன மக்களுக்கு மரியாதை இல்லை சீட்டு இல்லை.
திருமாவளவனால் வெற்றி பெற்ற திமுக, அவருக்கு வெறும் 8 சீட்டுகள்தான் கொடுக்கிறார்கள். ஆனால் பிரேமலதா வந்தா உடனடியாக 10 சீட்டு, ஒரு ராஜ்யசபா சீட்டு கொடுக்கப்படுகிறது. பிறகு எதற்காக திருமாவளவன் திமுக கூட்டணியில் நீடிக்க வேண்டும்?
காட்டுமன்னார்கோயில் பகுதி வளர்ச்சி அடையாத பகுதி, இந்த பகுதிக்கு எவ்வளவோ வளர்ச்சி திட்டங்கள் தேவைப்படுகிறது. அந்த சட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்படும்’’.
இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















