Nayeem Moosa: தவெக தலைவர் விஜயின் தளபதி, நிழல், 365 டிகிரி பாதுகாவலன்- யார் இந்த நயீம் மூஸா?
தவெக தலைவர் விஜய் உடனிருக்கும் நிழலாகவே மாறி தவெக தொண்டர்களின் ஃபேவரைட்டாக மாறி உள்ளார் நயீம் மூஸா.

தவெக தலைவர் விஜயின் அனைத்து பொது நிகழ்வுகளிலும் உடனிருக்கும் பாதுகாவலர், தளபதி விஜயின் தளபதி.. சட்டெனப் பார்க்கும்போது பிரசாந்த்தின் தோற்றத்தில் இருக்கும் நயீம் மூஸா யார்?
விரிவாகப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா நாளை (ஏப்ரல் 23) நடக்கும் நிலையில் நேற்று வரை பிரச்சாரம் நடந்தது. இதில் தவெக தலைவர் விஜயின் நிழலாகவும் பிரச்சாரங்களின்போது 365 டிகிரி விஜயைச் சுற்றிச் சுழன்று பாதுகாக்கும் தளபதியாகவும் நயீம் மூஸா செயல்பட்டு வந்தார்.
மதுரை மாநாடு, கரூர் உரை, கேரள படப்பிடிப்பு, தமிழ்நாடு முழுவதும் 12 இடங்களில் விஜயின் ரோடு ஷோ, தேர்தல் பரப்புரை என விஜய் உடனிருக்கும் நிழலாகவே மாறி தவெக தொண்டர்களின் ஃபேவரைட்டாக மாறி உள்ளார் நயீம் மூஸா. யார் இவர்?
மலையாளி மூஸா
அடிப்படையில் கேரளாவைச் சேர்ந்த மாஹே பகுதியில் (புதுச்சேரி) பிறந்தவர் நயீம் மூஸா. தொழில்முனைவோரான நயீம் மூஸா, வேலைக்காக துபாய்க்குக் குடிபெயர்ந்தார்.
பாடி பில்டிங்கில் ஆர்வம் கொண்ட நயீம் மூஸா, செலிபிரிட்டிகளுக்கான பாடிகார்டாக மாறினார். தற்போது துபாயை அடிப்படையாகக் கொண்ட ’ஜெண்டர் செக்யூரிட்டி’ என்னும் பிரபலங்களுக்கான பாதுகாவலர் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

ஜஸ்டின் தொடங்கி எஸ்கே வரை
ஜஸ்டின் பெய்பரில் தொடங்கி ஷாரூக் கான், கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன் வரை பலர் இவர் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள். கல்ஃப் பிராந்தியம் முழுவதும் இவரின் பாதுகாப்பு நிறுவனம் கொடிகட்டிப் பறக்கும் நிலையில், இந்தியாவிலும் கிளைகளைத் தொடங்கி உள்ளார் நயீம் மூஸா.
10 ஆண்டுகளுக்கும் மேலாக விஜயுடன் தொடர்புகொண்ட மூஸா, தற்போது விஜயின் முழு நேர பாதுகாவலராகப் பணியாற்றி வருகிறார். தவெக தலைவர் விஜய்க்கு மத்திய அரசு சார்பில் ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தாலும் நயீம் மூஸாதான் முதன்மைப் பாதுகாவலராக உள்ளார். அவரைத் தாண்டித்தான் அனைத்து பிரமுகர்களும் விஜயைச் சந்திக்கும் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது.
நம்பிக்கைக்கும் விசுவாசத்துக்கும் அடையாளம்
துபாயில் தன் குடும்பத்துடன் மூஸா வாழ்ந்து வந்தாலும் விஜயின் பாதுகாப்புக்கான சென்னைக்கு தொடர்ச்சியாகப் பறந்து வருகிறார். பாடிகார்டாக மட்டுமல்லாமல், நம்பிக்கைக்கும் விசுவாசத்துக்கும் அடையாளமாக மாறி இருக்கிறார் நயீம் மூஸா.
ட்ரெண்டிங் செய்திகள்




















