TN Election 2026: சில்லறை பிரச்னைலாம் ஓவர், மெயின் மேட்டருக்கு வருவோமா? வோட்டர்ஸ், ஓட்டு ஏன் போட்டே ஆகணும்..
TN Election 2026 Voters: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலிலுக்கான பரப்புரை நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், மக்கள் ஏன் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதற்கான சில காரணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

TN Election 2026 Voters: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் ஏன் முக்கியம் என இங்கே அறியலாம்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பரப்புரை நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இன்று ஒருநாள் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எந்தவித இடையூறும் இன்றி ஏன்? யாருக்கு? எதற்காக? வாக்களிக்க வேண்டும் என ஆலோசிப்பதற்கான வாய்ப்பு வாக்காளர்களுக்கு கிடைத்துள்ளது.இந்த முறை திமுக, அதிமுக, நாதக மற்றும் விஜயின் தவெக என நான்கு முனை போட்டி நிலவுகிறது. திமுக ஆட்சியை தக்கவைக்குமா? அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருமா? தனிப்பெரும் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்குமா? கூட்டணி ஆட்சி அமையுமா? விஜய் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துவார்? நாதக தனது வாக்கு சதவிகிதத்தை தக்கவைத்துக்கொள்ளுமா? என பல்வேறு கேள்விகள் நிலவுகின்றன.
சில்லறை பிரச்னை எல்லாம் ஓவர்..
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பாக கடந்த ஓராண்டு காலமாகவே களத்திலும், ஊடகங்களிலும் ஏராளமான விவாதங்கள் நிலவின. யார் யாருடன் கூட்டணி? எந்த கட்சி உட்கட்சி பிரச்னையாக இரண்டாக உடையும்? யாருக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும்? எந்த தொகுதிக்கு யார் வேட்பாளர்கள்? விஜய் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை இறக்குவாரா? தனித்து நிற்பாரா? அல்லது தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பாரா? வேட்பாளர்களே கடைசி நேரத்தில் கட்சி தாவுவார்களா? எந்த கட்சி என்ன தேர்தல் வாக்குறுதி அளிக்கும்? என ஏராளமான பிரச்னைகளை ஓயாமல் அலசி ஆராந்து விட்டோம். தொலைக்காட்சிகள், நாளிதழ்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் என அனைத்திலுமே அரசியல் கட்சிகள் சார்ந்த பிரச்னைகள் அனைத்துமே தேவையானதற்கும் அதிகமான அளவில் அலசி ஆராயப்பட்டுவிட்டன. இவை எல்லாமே வெறும் சில்லறை பிரச்னைகள் தான். ஆனால், அடுத்த 24 மணி நேரம் என்பதே தமிழக வாக்காளர்களுக்கான நேரமாக உள்ளது.
வோட்டர்ஸ், ஓட்டு போட்டே ஆகணும்..
அரசாங்கம் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வரவில்லை, வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை, சட்ட-ஒழுங்கை காப்பாற்றவில்லை என ஒரு தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். எதிர்க்கட்சியாக முறையாக செயல்படவில்லை, மாநிலத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுடன் கைகோர்த்து தமிழக மக்களை துரோகம் செய்கிறது என மற்றொரு தரப்பு சாடுகிறது. திரையுலக பிரபலத்தை வைத்து மட்டுமே முதலமைச்சர் ஆகிவிடலாம் என முயல்வதாக, இரண்டு ஆண்ட கட்சிகளும் ஒரு தரப்பை குறிவைத்து விமர்சிப்பது என இந்த ஒட்டுமொத்த தேர்தல் பரப்புரையும் முடிவுற்றுள்ளது. இதையெல்லாம் விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டாயம் அறிந்திருப்பீர்கள். எனவே, உள்வாங்கிய அனைத்து உண்மையான தகவல்களையும் அலசி, ஆராய்ந்து நாளை வாக்களிக்க வேண்டியது வாக்காளர்களின் கடைமையாகும்.
ஏன் ஓட்டு போடணும்..
அரசாங்கம் எதுவும் செய்யவில்லை என கோபப்பட்டாலோ, சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் மட்டும் போட்டாலோ போதுமா? உங்களது எதிர்ப்பை பதிவு செய்வதற்கான சரியான வாய்ப்பு தான், அரசியலமைப்புச் சட்டம் உங்களுக்கு வழங்கியுள்ள வாக்குரிமை. என்னுடைய ஒரு ஓட்டு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என எண்ணியே பலர் வாக்களிக்க விரும்புவதில்லை. ஆனால், நீங்கள் பதிவு செய்யும் வாக்கு என்பது வெற்றி, தோல்வியை மட்டுமே தீர்மானிப்பதில்லை. ஒரு தரப்பும் செய்யும் தவறை சுட்டிக்காட்டவும், மக்களிடையே அவர்கள் மீது அதிருப்தி நிலவுகிறது என்பதை உணர்த்தவும் உதவுகிறது. அதன் மூலம் கிடைக்கும் அரசியல்வாதிகள் தாங்கள் செய்த தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. உங்களுக்கான சரியான பிரதிநிதியை நீங்கள் தேர்வு செய்தாலே உங்களுக்கும், உங்கள் பகுதிக்குமான எல்லா தேவைகளும் நிறைவேறிவிடும். ஆனால், தலைமை பதவியில் உள்ள ஒருவரை மட்டுமே நம்பி வாக்காளித்தால் அது சாத்தியமா? என நீங்கள் தான் சிந்திக்க வேண்டும்.
யாருக்கு ஓட்டு போடணும்?
முதலமைச்சருக்காக ஓட்டு போட வேண்டியது அவசியமில்லை. உங்கள் தொகுதிக்கான சரியான பிரதிநிதி யார் என்பதை மட்டுமே நினைவில் கொண்டு வாக்களியுங்கள். வேட்பாளரின் கல்வி, அனுபவம், சமூகப் பணி ஆகியவற்றை ஆராயுங்கள். உங்கள் தொகுதியில் நிலவும் பிரச்னைகள் என்ன? தொகுதியின் பலம், பலவீனம், நிறை மற்றும் குறைகள் குறித்து அறிந்திருக்கிறா? அவற்றிற்காக அவர் வசம் உள்ள செயல் திட்டங்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை என்ன என்பதை அறிய முயலுங்கள். ஒவ்வொரு தொகுதியிலும் மக்களுக்கான சரியான பிரதிநிதி ஹேர்ந்தெடுக்கப்பட்டாலே. அவர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் முதலமைச்சர் என்பவரும் மக்களுக்கானவராக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
கைய கொஞ்சம் அடக்குங்க..
தமிழ்நாட்டில் ஏற்கனவே வாக்குகளுக்கு பணம் கொடுக்கும் பணிகள் தீவிரமடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயிரம் ரூபாய் தொடங்கி 25 ஆயிரம் ரூபாய் வரை ஒரு வாக்கிற்கு கொடுக்கப்படுவதாகவும், ஒரு கிராம் தங்கம், கொலுசு, குவாட்டர் மற்றும் பிரியாணி என பலவகையான உபசரிப்புகளும் வாக்களர்களுக்கு வாரி வழங்கப்படுகிறதாம். இப்படி கோடிகளை செலவு செய்து எம்.எல்.ஏ., ஆகும் ஒருவர் எப்படி உங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் சேவகராக இருப்பார் என எதிர்பார்க்கின்றனர்? எந்த தொழிலிலும் முதலீடு செய்பவன் லாபத்தையே எதிர்பார்ப்பான். இன்று வாக்குக்கு பணம் அளிக்கும் வேட்பாளர் நாளை எம்.எல்.ஏ., ஆனால் சம்பாதிப்பதிலேயே அதிக கவனம் செலுத்துவான். நிச்சயம் ஊழல் என்பது அரங்கேற தான் செய்யும். எனவே, வாக்குக்கு பணம் பெற்றுக்கொண்டு ஒருவரை தேர்வு செய்து, ஊழலுக்கான தொடக்கப்புள்ளியாக வாக்காளர்களான நீங்களே இருந்துவிடாதீர்கள்.
ட்ரெண்டிங் செய்திகள்




















