Lok sabha election Result: தென்காசி தொகுதியில் இம்முறையும் தோல்வியை தழுவினாரா? ; கிருஷ்ணசாமியும் - தேர்தல் முடிவுகளும்..!
"7 வது முறையாக மீண்டும் தென்காசி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இவர் 24 சுற்றுகளில் 20 வது சுற்று முடிவில் 2,15,513 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்"
கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தென்காசி தொகுதியில் மொத்தமுள்ள 15,25,439 வாக்குகளில் 10,58,987 வாக்குகள் பதிவாகின. இதில் அரசு மருத்துவருமான ராணி ஸ்ரீகுமார் திமுக சார்பில் போட்டியிட்டார். அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி மீண்டும் போட்டியிட்டார். அதேபோல பாஜக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனும், நாம் தமிழர் கட்சி சார்பில் மதிவாணன் என்பவரும் போட்டியிட்டார். இவர்களுடன் சுயேச்சை வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தம் 15 பேர் களத்தில் உள்ளனர். இந்த சூழலில் இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் மாலை 6.30 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 24 சுற்றுகளில் 20 வது சுற்றில்
திமுக கூட்டணி: 4, 00,816
அதிமுக கூட்டணி: 2,15,513
பாஜக கூட்டணி: 1, 92,876
நாதக: 1,20,595 வாக்குகளும் பெற்று
திமுக வேட்பாளர் ராணிஸ்ரீகுமார் முன்னிலையில் இருந்து வருகிறார்.
காங்கிரசின் கோட்டை:
கடந்த 1957இல், இந்த தொகுதி உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே இந்த தொகுதி விளங்கி வந்துள்ளது. தொடர்ந்து ஒன்பது முறை காங்கிரஸ் கட்சியும் ஒருமுறை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. அதற்கடுத்ததாக அதிமுக 3 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு முறையும், திமுக ஒரு தடவையும் வெற்றி பெற்றுள்ளது.தொகுதி உருவாக்கப்பட்டு 62 ஆண்டுகளுக்குப் பிறகு 2019-ல் முதன் முறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் தனுஷ் எம். குமார் வெற்றி பெற்றார். பொதுவாக இந்த தொகுதியில் திமுக கூட்டணிக்கு தான் ஒவ்வொரு முறையும் ஒதுக்கப்படும். ஆனால் இந்த முறையும் இங்கு திமுகவே களமிறங்கி உள்ளது. இம்முறையும் புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமி தோல்வியை சந்தித்துள்ளார்.
6 முறை தொடர் போட்டியும், தோல்வியும்:
ஒவ்வொரு லோக்சபா தேர்தலிலும் தென்காசி தொகுதியில் போட்டியிடுவதை வழக்கமாக கொண்ட டாக்டர் கிருஷ்ணசாமி முதன் முதலாக தென்காசி தொகுதியில் கடந்த 1998 ஆம் ஆண்டு போட்டியிட்டார். அப்போது 1,23,592 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். அதேபோல 1999 இல் 1,86,220 வாக்குகளும், 2004 இல் 1,01,122 வாக்குகளும், 2014 இல் 2,62812 வாக்குகளும், 2019 இல் 3,55,389 வாக்குகளும் பெற்று 6 முறை தொடர்ச்சியாக தோல்வியை தழுவினார். இந்த நிலையில் 7 வது முறையாக மீண்டும் தென்காசி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இவர் 24 சுற்றுகளில் 20 வது சுற்று முடிவில் 2,15,513 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். இதனால் 7 வது முறையும் இவர் தோல்வியை சந்தித்ததாகவே தெரிகிறது. திமுக, அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளருக்கு இடையே கடும் போட்டி நிலவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று வெளியான வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் 2 லட்சம் வாக்குகளை அதிகமாக பெற்று முன்னிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரின் வெற்றியும் உறுதி செய்யப்பட்டதாகவே தெரிகிறது. ஸ்டார் வேட்பாளரான டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் ஜான் பாண்டியன் ஆகிய இருவரை லட்சம் வாக்குகளில் பின்னுக்குத் தள்ளிக்கு அரசியலில் பெரிதளவு அறிமுகம் இல்லாத திமுக வேட்பாளரான ராணி ஸ்ரீகுமார் முன்னிலையில் இருப்பது பேசுப்பொருளாகி உள்ளது.