Murasoli: தஞ்சை எங்களது கோட்டை; ஒன்பதாவது முறையாக வெற்றி - எத்தனை வாக்குகள் வித்தியாசம் தெரியுமா?
Thanjavur Lok Sabha Election Result 2024: நோட்டாவை விட ஏழு சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் வாக்குகளில் பின்தங்கி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் முரசொலி 3 லட்சத்து 19 ஆயிரத்து 583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து திமுக ஒன்பதாவது முறையாக தஞ்சையை தனது கோட்டையாக மாற்றி உள்ளது.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள், 30வது தொகுதி ஆகும். இத்தொகுதியில் 1952 ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடந்து வருகிறது. இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. மன்னார்குடி, திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகியவை ஆகும்
தஞ்சாவூர் லோக்சபா தொகுதி பலதரப்பட்ட மக்களை பிரதிபலிக்கும் தமிழ்நாட்டின் முக்கியமான தொகுதியாக உள்ளது. தஞ்சை தொகுதியில் புதிய முகமாக களம் இறங்கிய முரசொலி திருவையாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்னங்குடி கிராமத்தை சேர்ந்தவர். அந்த பகுதியில் செல்வாக்காக விளங்கிய எஸ்.கந்தசாமி நாட்டார் என்பவரது பேரன் தான் முரசொலி.
பி.எஸ்.சி. பி.எல். படித்துள்ளார் முரசொலி. இவரது தந்தை ஊராட்சி மன்ற தலைவராகவும், தென்னங்குடி தொடக்க வேளாண்மை சங்க தலைவராகவும் பணியாற்றியவர், முரசொலி 2004 முதல் தென்னங்குடி ஊராட்சி பிரதிநிதியாகவும், 2006 – 2011 ஆண்டுகளில் தஞ்சாவூர் ஒன்றியக்குழு உறுப்பினராகவும், 2014 - 2020 வரை தி.மு.க பொதுக்குழு உறுப்பினராகவும், 2020 தஞ்சை வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு. 2022 ல் நடைபெற்ற தி.மு.க வின் 15 வது அமைப்பு தேர்தலில் தஞ்சை வடக்கு ஒன்றிய கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தென்னங்குடி கிராமத்தை சேர்ந்த ஒன்றிய செயலாளருக்கு தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியது திமுக தலைமை. இந்நிலையில் திமுக வேட்பாளர் முரசொலி, தன் மீது தலைமை வைத்த நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில் 5,02 ,245 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தஞ்சாவூர் தொகுதியை கடந்த எட்டு முறையை திமுகவை கைப்பற்றியது. தற்போது புதிய முகமாக களம் இறங்கிய முரசொலி வெற்றி பெற்றதை ஒன்பதாவது முறையாக வெற்றி பெற்று தஞ்சாவூரை திமுக கோட்டையாக்கி உள்ளார்.
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் எண்ணப்பட்ட தபால் ஓட்டுக்களின் விபரம் வருமாறு:
திமுக வேட்பாளர் முரசொலி 3423, தேமுதிக வேட்பாளர் சிவனேசன் 490, பாஜ வேட்பாளர் முருகானந்தம் 1026, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹிமாயூன் கபீர் 610வாக்குகள் பெற்றிருந்தனர். தபால் வாக்குகளிலும் நோட்டாவிற்கு 159 வாக்குகள் கிடைத்துள்ளது. இதில் சுயேச்சை வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் என மொத்தம் 5910 வாக்குகள். பதிவான 6454 வாக்குகளில் 544 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் முரசொலி 5,02,245 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தேமுதிக வேட்பாளர் சிவனேசன் 1,82,662 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தையும், பாஜ வேட்பாளர் கருப்பு முருகானந்தம் 170613 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹிமாயூன் கபூர் 120293 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தையும் பெற்றனர். இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் முரசொலி 3 லட்சத்து 19 ஆயிரத்து 583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இதில் முக்கிய கட்சி வேட்பாளரான திமுக முரசொலி 3 லட்சத்து 19 ஆயிரத்து 583 வாக்குகள் பற்றி வெற்றி பெற்றார். தேமுதிக, பா.ஜ., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் முறையே 2, 3, 4 இடங்களை பெற்றனர்.
களத்தில் இருந்த மற்ற எட்டு சுயேட்சை வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுயேட்சை வேட்பாளர்களை விட நோட்டாவுக்கு ஓட்டு அதிகம்
இந்நிலையில் ஒவ்வொரு சுற்று முடிவிலும் சுயேட்சை வேட்பாளர்களை விட நோட்டா பெற்ற வாக்குகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. முதல் சுற்றில் நோட்டாவுக்கு 663, இரண்டாவது சுற்றில் 1308, மூன்றாவது சுற்றில் 1953 என்று நோட்டாவும் வலுவாக தனக்கு கிடைத்துவரும் வாக்குகளை உயர்த்திக் கொண்டே வந்தது. நோட்டாவை விட ஏழு சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் வாக்குகளில் பின்தங்கி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுயேட்சை வேட்பாளர் ரங்கசாமி மட்டும் நோட்டாவை விட கூடுதல் வாக்குகள் பெற்றிருந்தார். 23வது சுற்று முடிவில் நோட்டாவிற்கு 12674 வாக்குகள் கிடைத்திருந்தது.