Tamilnadu Lok sabha election 2024: 100 % சொல் போதாது - செயல் வேண்டும் - மயிலாடுதுறையில் பெயர் விடுப்பட்ட வாக்காளர்கள் அதிகாரிகளுக்கு கேள்வி..?
மயிலாடுதுறையின் பிரபல ஐந்து ரூபாய் டாக்டர் ராமமூர்த்தி பெயர் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டதால் அவர் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியை செய்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல்
இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தல் ஏப்ரல் 19 -ம் தேதியான இன்று நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து வருகின்ற ஜுன் 4 -ம் அன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் மார்ச் 27 அன்று வரை நடைபெற்றதில் 30 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதில் வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 28 -ம் தேதி அன்று நடைபெற்றது. அதன்படி 17 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது, மீதம் உள்ள 13 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் யாரும் வேட்புமனுக்களை வாபஸ் பெறாத நிலையில் களத்தில் 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 1743 வாக்குசாவடிகளில் வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விடுப்பட்டுள்ள வாக்காளர்கள் பெயர்கள்.
இந்நிலையில் இன்று மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் பெயர்கள் விடுப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக மயிலாடுதுறை நகரப்பகுதியில் உள்ள 143, 144 ஆகிய இரண்டு வாக்கு சாவடிகளில் மட்டும் சுமார் 500 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பெயர்கள் விடுப்பட்டுள்ளதாக கூறி அப்பகுதி மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோன்று பல்வேறு கிராமங்களில் இந்த பிரச்சினை எழுந்துள்ளது.
Lok sabha election 2024: திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாமக வேட்பாளர் - காரணம் இதுதான்!
விடுப்பட்ட பிரபல ஐந்து ரூபாய் டாக்டர் ராமமூர்த்தி பெயர்
மயிலாடுதுறை பல ஆண்டுகளாக ஏழை எளிய மக்களுக்காக ஐந்து ரூபாய் மட்டுமே பெற்றுக்கொண்டு டாக்டர் ராமமூர்த்தி சிகிச்சை அளித்து வந்தார். மேலும் அந்த ஐந்து ரூபாய் இல்லாதவர்களுக்கு கூட தான் இலவசமாக மருத்துவம் பார்த்து அவர்களுக்கான மருத்து மாத்திரைகளையும் வழங்கி வந்தார். இந்த சூழலில் வயது மூப்பு காரணமாக தனது மகனுடன் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இந்த வயது மூப்பு தள்ளாடும் வயதிலும் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என எண்ணிய மருத்துவர் ராமமூர்த்தி இன்று இந்த கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சுமார் 300 கிலோமீட்டர் தொலைவு பயணம் செய்து வாக்களிக்க வந்தார். ஆனால் இங்கு வந்த அவருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால், மனம் வருந்தியவாறு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதனை பார்த்த பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வுகளை செய்யும் அரசு முறையாக வாக்காளர் பட்டியலை சரிபார்த்து அனைவரது பெயரும் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், அதனை விடுத்து வெற்று விளம்பரங்கள் போதாது என்றும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே 100 சதவீதம் வாக்குபதிவு சாத்தியங்கள் உள்ளது. அதைவிடுத்து, இதுபோன்று ஆர்வமுடன் வருபவர்களை உதாசீனம் படுத்தும் வகையில் செயல்பட்டால் 50 சதவீதம் வாக்குப்பதிவு கூட நடைபெற்றது என எச்சரித்தனர்.