TN Lok Sabha Election: சேலத்தில் சோகம்.. வாக்கு செலுத்த வந்த 2 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு
சேலத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்களிக்க வந்த இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மும்மரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் காலை முதலே முதியவர்கள் அதிக அளவில் வாக்களிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்கள் சுலபமாக வாக்களிப்பதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக சர்க்கரை நாற்காலி மூலமாக வாக்குச்சாவடி மையத்திற்குள் அழைத்து சென்று முதியவர்கள் வாக்களித்த பிறகு வெளியே அழைத்து வரும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பழைய சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி (65) என்பவர் வாக்களிக்க மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார். அப்போது திடீரென பழனிசாமிக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது அப்போது வாக்குச்சாவடி அருகே ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. உடனடியாக சிகிச்சைக்காக பழனிச்சாமி அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார் அவருக்கு ஏற்கனவே இருதய நோய் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் சேலம் ஆத்தூர் அடுத்துள்ள கங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொண்டையம் பள்ளியை சேர்ந்த சின்னபொண்ணு (77) வாக்களிக்க சென்றபோது வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் மூதாட்டி உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சேலத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்களிக்க வந்த இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.