Tamil Nadu Election 2024: கரூரில் வாக்காளரின் வாக்கு ஏற்கனவே போடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததால் குழப்பம்
TN Lok Sabha Elections 2024 Voting: கரூர் அருகே ஓட்டு போட அனுமதி மறுப்பு - வாக்காளர் ஒருவரின் ஓட்டு ஏற்கனவே போடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததால் குழப்பம் வாக்குப்பதிவு அரை மணி நேரம் நிறுத்தம்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உள்வீரராக்கியம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் செயல்படும் வாக்குச்சாவடியில் அதே கிராமத்தை சார்ந்த கந்தசாமி (வயது 77) த/பெ பழனியப்பன் என்பவர் வாக்குச் சாவடிக்கு வாக்களிக்க ஆதார் கார்டுடன் வந்துள்ளார். அப்போது, அவருடைய ஓட்டு ஏற்கனவே போடப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து தனது மகனிடம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது மகன், தனது தந்தையுடன் வந்து வாக்குச்சாவடியில் உள்ள அதிகாரிகளிடம் கேட்ட போது, பூத் ஏஜெண்டுகள் அனுமதியுடன் ஓட்டு போடப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன், தந்தை ஓட்டு போட்டு விட்டு சென்று விட்டதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, வாக்குசாவடியில் இருந்த பூத் ஏஜெண்டுகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால் அந்த பூத்தில் அரை மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.
வாக்காளர் பெயர் மற்றும் தந்தையின் பெயர் ஒரே மாதிரி இருந்ததால் மாற்றி வாக்களித்து குழப்பம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மதியம் மேல் இது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கு பரபரப்பாகியதால் முதியவரை அழைத்துச் சென்று அவரை வாக்களிக்க வைத்து அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.