TN Elections 2021: 3-வது இடத்தில் நாம் தமிழர், 5 இடங்களில் பாஜக முன்னிலை.. கவனிக்கவேண்டிய மாற்றங்கள் என்ன?
தேர்தலில் இரு கட்சிகளும் இந்த நிலையை அடைந்துள்ளது அரசியல் விமர்சகர்கள் பார்வையில் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. மேலும், மக்களின் மனநிலையில் மாற்றம் உண்டாகி வருவதையும் இது காட்டுகிறது. எனவே, இந்தத் தேர்தலில் இது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களாகும்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 5 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இது, இந்த தேர்தலில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகின்றன. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டதை தொடர்ந்து, வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.
தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணி 142 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதிமுக 91 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக 5 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், பெரும்பாலான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3-வது இடம் பிடித்துவருகிறது. திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 1639 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.
234 தொகுதிகளிலும் தனித்துப்போட்டி, 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள், 117 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்கள் என இருபாலருக்கும் 50-50 வாய்ப்பு போன்ற சில கவனிக்கத்தக்க விஷயங்களை செய்யும் கட்சியாக உள்ளது நாம் தமிழர் கட்சி. 2016-இல் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்கு சதவிகிதம் 1.1, ஆனால் 2019-இல் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் களம்கண்ட நாம்தமிழர் 3.87 வாக்கு சதவிகிதத்தை பெற்று கவனிக்க வைத்தது. வளர்ந்து வரும் வாக்குசதவீதத்தை கணக்கில் கொண்டு அதே நம்பிக்கையுடன் 2021-இலும் 234 தொகுதிகளிலும் தனித்துக்களம் இறங்கியது நாம் தமிழர்.
நாகர்கோவிலில் பாரதிய ஜனதாவின் காந்தி, திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் மற்றும் துறைமுகம் தொகுதியில் வினோஜ் செல்வம் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். மற்றபடி கட்சியின் இதர முக்கிய வேட்பாளர்களான, பாஜக வேட்பாளர் குஷ்பு 1,357 வாக்குகள் பெற்று பின்னடைவில் இருக்கிறார், காரைக்குடியில் பாரதிய ஜனதா வேட்பாளர் ஹெச்.ராஜா பின்னடைவில் உள்ளார், அரவக்குறிச்சியில் அண்ணாமலை பின்னடைவில் உள்ளார். தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவரான எல்.முருகன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அதிமுக, திமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளுக்கு அடுத்து நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. பாஜக 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளும் இந்த நிலையை அடைந்துள்ளது அரசியல் விமர்சகர்கள் பார்வையில் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. மேலும், மக்களின் மனநிலையில் மாற்றம் உண்டாகி வருவதையும் இது காட்டுகிறது. எனவே, இந்தத் தேர்தலில் இது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களாகும்.