(Source: ECI/ABP News/ABP Majha)
Lok Sabha Elections 2024: ”ஊழல்களின் சாம்பியன் பிரதமர் மோடி, பாஜகவுக்கு 150 தான்” - ராகுல் காந்தி ஆவேசம்
Rahul Gandh On Modi: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியையும், பாஜகவயும் கடுமையாக சாடி பேசியுள்ளார்.
Rahul Gandh On Modi: ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோர் உத்தரபிரதேசத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
”ஊழல்களின் சாம்பியன் மோடி”
காஸியாபாத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, “பிரதமர் மோடி சமீபத்தில் ஒரு ஸ்கிரிப்டட் பேட்டி கொடுத்தார். அதில் தேர்தல் நிதியில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காகவே தேர்தல் பத்திரங்கள் கொண்டு வரப்பட்டதாக அவர் கூறினார். அப்படி இருந்தால், ஏன் உச்சநீதிமன்றம் அதை ரத்து செய்தது? அப்படி இருந்தால் நன்கொடையாளர்களின் பெயரை பாஜக ஏன் மறைத்தது. தேர்தல் பத்திரங்கள் உலகிலேயே மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் திட்டமாகும். பிரதமர் ஊழல்களின் சாம்பியன் என்பது முழு நாட்டிற்கும் தெரியும். பாஜக இந்த முறை 150 சிட்களுக்கும் சுருக்கப்படும். I.N.D.I.A. கூட்டணிக்கு வலுவான அடித்தளம் உள்ளது” என தெரிவித்தார்.
பிரதமர் மோடி சொன்னது என்ன?
அண்மையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “தேர்தல் பத்திரங்கள் இல்லை என்றால், பணம் எங்கிருந்து வந்தது, எங்கு சென்றது என்பதைக் கண்டுபிடிக்க யாருக்கு அதிகாரம் இருந்திருக்கும்? தேர்தல் பத்திர திட்டத்தை மேம்படுத்துவது மிகவும் சாத்தியம். ஆனால் அதனை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததன் மூலம், இன்று நாட்டை முற்றிலும் கறுப்புப் பணத்தை நோக்கித் தள்ளிவிட்டோம். அதனால் அனைவரும் வருந்துவார்கள்” என்று தேர்தல் பத்திர திட்டங்களுக்கு ஆதரவாக பிரதமர் பேசியிருந்தார். அதனை விமர்சித்து தான், பிரதமர் மோடி ஊழல்களின் சாம்பியன் என ராகுல் காந்தி இப்போது பேசியுள்ளார்.
அமேதியில் போட்டியா?
மீண்டும் அமேதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, ”யார் எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது போன்ற முடிவுகளை காங்கிரஸ் தேர்தல் குழு தான் முடிவு செய்யும். அந்த வகையில் அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து கட்சி எடுக்கும் முடிவை நான் பின்பற்றுவேன்” என ராகுல் காந்தி பதிலளித்தார். கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் ராகுல் காந்தி அமேதி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டார். அதில் அமேதி தொகுதியில் தோல்வியுற்றார். அதேநேரம், வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். அதைதொடர்ந்து இந்த முறையும் அங்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதேநேரம், அமேதியில் மீண்டும் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் I.N.D.I.A. கூட்டணி:
உத்தரபிரதேசத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. அதில், I.N.D.I.A. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 63 தொகுதிகள் சமாஜ்வாதி உள்ளிட்ட மற்ற கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. இங்கு கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் 62 தொகுதிகளையும், 2014ம் ஆண்டு தேர்தலில் 71 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. இந்நிலையில், வரும் 19ம் தேதி முதற்கட்டமாக உத்தரபிரதேசத்தின் 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டே இன்று ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.