TN Lok Sabha Election Results: இந்தியா முழுவதும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு அலை வீசுகிறது - அமைச்சர் எ.வ.வேலு
பிரதமர் நரேந்திர மோடி 400 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் எனக் கூறினார். ஆனால் அவரால் எந்த இலக்கையும் அடைய முடியவில்லை, இது இந்தியா முழுவதும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு அலை வீசியதை உறுதி செய்துள்ளது - அமைச்சர் எ.வ.வேலு
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சி.என். அண்ணாதுரை 2 லட்சத்து 33 ஆயிரத்து 931 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் பொது பார்வையாளர் மகவீர் பிரசாத் மீனா, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் ஆகியோரிடம் இருந்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், துணை சபாநாயகர் பிச்சாண்டி, வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேட்டியில் கூறியதாவது
திமுக ஆட்சி பொறுப்பேற்று மூன்று ஆண்டு காலமாக மக்களுக்கு பயன் தரக்கூடிய நல்லதொரு ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்தியுள்ளார். அதற்கு அங்கீகாரமாகவே மக்கள் பாராட்டும் வகையில் தமிழகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைந்த இந்தியா கூட்டணி 40 வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இது இந்தியா கூட்டணி வெற்றி என கூறினாலும், அதற்கு தமிழக முதல்வர் தான் காரணம், இந்த வெற்றிக்கு முதல்வர் மேற்கொண்ட அரசியல் வியூகம் உள்ளிட்ட பல நடவடிக்கைகளால் தான் இந்தியாவிலேயே எந்தக் கூட்டணியும் பெறாத வகையில் தமிழகத்தில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்தியா முழுவதும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு அலை வீசுகிறது
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளில் தலா 2 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர்கள் அண்ணாதுரை மற்றும் தரணி வேந்தன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதற்காக திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தமிழக முதல்வர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு மாவட்ட மக்கள் சார்பிலும், இந்தியா கூட்டணி தலைவர்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதேநேரம் பிரதமர் நரேந்திர மோடி 400 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் எனக் கூறினார். ஆனால் அவரால் எந்த இலக்கையும் அடைய முடியவில்லை, இது இந்தியா முழுவதும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு அலை வீசியதை உறுதி செய்துள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். அப்போது அமைச்சர் செந்தில் மஸ்தான், எம்எல்ஏக்கள் கிரி, சரவணன், அம்பேத்குமார், ஜோதி , உறுப்பினர் ஸ்ரீதரன் நகரச் செயலாளர் கார்த்திகே வேல்மாறன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.