BJP-PMK-ADMK: இன்று சேலம் வரும் பிரதமர் மோடி - பாஜக மேடையேறும் அன்புமணி - வலுவிழந்த எடப்பாடி பழனிசாமி?
Lok Sabha Election 2024: சேலத்தில் இன்று நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Lok Sabha Election 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி பாமகவானது பாஜக உடன் கூட்டணி சேர்ந்து இருப்பதால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக வலுவிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக கூட்டணியில் பாமக:
நாடாளுமன்ற மக்களவ தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், தமிழ்நாட்டில் நாளை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களை உடனடியாக முடித்து, அடுத்தகட்ட பணிகளை தொடங்க அரசியல் தீவிரம் காட்ட் வருகின்றன. அந்த வகையில் பாமகவானது அதிமுக கூட்டணியில் சேருவது உறுதி என நேற்று செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. இதனிடையே, திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி, முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் முடிவில், திடீர் திருப்பமாக பாஜக உடன் கூட்டணி உறுதி என பாமக அறிவித்தது.
பிரதமர் உடன் மேடையில் அன்புமணி?
இதையடுத்து, இன்று சேலம் மாவட்டம் கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் பிரதமர் மோடி பங்கேற்கும் பாஜகவின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்க உள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாசும் பங்கேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னதாகவே பாமக உடனான தொகுதிப் பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, 7 மக்களவை தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவி பாமகவிற்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதோடு, பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால், அன்புமணிக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தைலாபுரம் தோட்டம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வலுவடைந்ததா பாஜக கூட்டணி?
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு, பாஜக தமிழ்நாட்டில் தனது தலைமையிலான புதிய கூட்டணியை கட்டமைக்க தொடங்கியது. அதன்படி, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் ஆகியவை பாஜகவுடன் இணைந்தன. இந்த கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் இடம்பெற்றுள்ளார். ஆனால், மேற்குறிப்பிட்ட எந்தவொரு கட்சிக்கும் வலுவான வாக்கு வங்கி கிடையாது. ஓபிஎஸ் மற்றும் டிடிவி ஆகியோருக்கு தனிநபர் செல்வாக்கு மட்டுமே உண்டு. இதனால் இந்த கூட்டணி பலவீனமானதாகவே கருதப்பட்டது. இந்நிலையில், பாமக தனது கூட்டணியில் சேர்த்து இருப்பது பாஜகவிற்கு பெரும் பலமாகவே பார்க்கப்படுகிறது.
வலுவிழந்த அதிமுக?
இதனிடையே, பாமக தனது கூட்டணிக்கு வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த அதிமுகவிற்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தற்போதைய சூழலில் தேமுதிக உடன் மட்டுமே அக்கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மக்களவை தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து களம் காண்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். ஆனால், கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பெரும்பாலான கூட்டணி கட்சிகள் தற்போது பாஜக பக்கம் தாவியுள்ளன. இதனால், பெரிய வாக்கு வங்கிகள் என எதுவும் இல்லாத சிறிய கட்சிகள் உடன் மட்டுமே கூட்டணி வைக்கும் சூழல் உள்ளது. இது அதிமுக தனித்து தேர்தலில் களம் காண்பதற்கு நிகரானதே என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சிக்கு இப்படி ஒரு நிலையா என அதிமுக தொண்டர்களே சற்று விரக்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.