நெல்லையில் பாஜக வெற்றி பெற்றுவிடும் என பிரச்சாரம் செய்ய விடாமல் தொடர்சோதனை - நயினார் நாகேந்திரன்
சென்னையில் 4 கோடி பிடிபட்ட விவகாரம் தொடர்பாக தற்போது வரை எனக்கு எந்த சம்மனும் வரவில்லை - நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரன் தான் வெற்றி பெற்றால் தொகுதியில் செய்யக்கூடிய முக்கியமான 25 வாக்குறுதிகளை வெளியிட்டார். அதில் மண்பாண்ட தொழிலாளர், கட்டிட தொழிலாளர், ஓய்வு பெற்ற ஆசிரியர் பத்திரிகையாளர் என பல்வேறு நபர்களைக் கொண்டு வாக்குறுதிகளை பதாகைகள் மூலம் வெளியிட்டார். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தனது சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கப் போவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னையில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பிடிபட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தொடர்பாக தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அது குறித்து சம்மன் ஏதும் வந்துள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு தற்போது வரை தனக்கு எவ்வித சம்மன் வரவில்லை என தெரிவித்தார். மேலும் அமைச்சர் துரைமுருகன் தொடர்பான இடங்களில் 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் இடங்களில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கெல்லாம் சம்மன் வழங்கப்படவில்லை. பாரதிய ஜனதா கட்சிக்கு திருநெல்வேலி தொகுதி வாய்ப்பான தொகுதியாக இருப்பதால் நான் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மூன்று அமைச்சர்கள் தொகுதியில் முகாமிட்டு பணியாற்றி வருகிறார்கள்.
தேவைப்பட்டால் முதலமைச்சரும் வந்து சேர்வார். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் அதனை காவல்துறையினர் தடுக்கவில்லை. ஆனால் எனது வாகனத்தில் பிரச்சாரத்திற்கு செல்லும் போது தினம் மூன்று முறை சோதனை செய்கிறார்கள் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கும் நோக்கில் செயல்படுகிறார்கள் இதனால் எனக்கு மன அழுத்தம் ஏதும் இல்லை. எங்களது வணிக வளாகத்தில் தேர்தல் அலுவலகம் பார்கிங்கில் செயல்படுகிறது. வணிக வளாகத்திற்கு பின்புறம் வேறு பார்க்கிங் உள்ளது. இதில் திமுகவினருக்கு என்ன பிரச்சனை உள்ளதுஎன கேள்வி எழுப்பினார் நயினார் நாகேந்திரன் பார்க்கிங்கில் தேர்தல் அலுவலகத்தை நடத்தி வருவதால் வணிக வளாகத்திற்கு வரும் நபர்கள் பாதிக்கப்படுவதாக திமுக சார்பில் நேற்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாளை திங்கட்கிழமை பாரதப் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம் அம்பாசமுத்திரத்தில் நடைபெற உள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும், தூத்துக்குடி வேட்பாளர்கள் இதில் கலந்து கொள்வார்கள். திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதியைச் சார்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்