சாமானிய இந்துப் பிள்ளைகள் படிக்கக் கூடாது என்பதற்காக நீட் தேர்வை திணிக்கிறார்கள் - கனிமொழி
கோயில்களை எல்லாம் திமுக இடித்துவிடும் என்று பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். 1330 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்திருப்பவர் நமது முதலமைச்சர்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான, இந்தியா கூட்டணியின் சார்பில், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, பசுவந்தனை, நாகம்பட்டி, அயன்ராசாப்பட்டி, கைலாசபுரம், மாசார்பட்டி, மேலகரந்தை, அழகாபுரி, கீழநம்பிபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்களைச் சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது கனிமொழி பேசும்போது, "தூத்துக்குடியில் கடந்த முறை நான் தேர்தலில் போட்டியிடபோது, ‘இவர் வெற்றிபெற்றால் சென்னையிலேயே இருப்பார்’ என்று விமர்சனங்களை வைத்தனர். ஆனால் தூத்துக்குடியை எனது இன்னொரு தாய் வீடாகவே கருதி உங்களோடு இருந்து பணிகளை செய்திருக்கிறேன். அதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் எனக்கு இன்னொரு வாய்ப்பை இதே தூத்துக்குடியில் வழங்கியிருக்கிறார்கள்.
சமீபத்தில் முதலமைச்சர் இங்கே வந்து உலகில் மிகப்பெரிய கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார். 16 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் அந்த ஆலை இன்னும் 15 மாதங்களில் கட்டி முடிக்கப்படும். அதன்பின் நமது பகுதியில் இருக்கக் கூடிய இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று ஆலை நிர்வாகத்திடம் முதல்வர் வலியுறுத்திக் கூறியிருக்கிறார். எனவே நம்மூர் இளைஞர்கள், இளம்பெண்கள் பலருக்கும் இந்த ஆலையில் வேலை கிடைக்கும்.
டெல்லியில் இருக்கும் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை ஒதுக்குவதில்லை. நாம் வெள்ளத்தில் தவித்தபோது கூட அவர்கள் ஒரு ரூபாய் நிதியுதவி செய்யவில்லை. அப்போது மோடி நம்மை எட்டிக் கூட பார்க்கவில்லை. ஆனால் இப்போது ஓட்டுகேட்டு வந்து கொண்டே இருக்கிறார். அவர்கள் எந்த சின்னத்தில் நின்றாலும் மக்கள் ஓட்டுப் போடப் போவதில்லை. பாஜக என்ன சொல்லுது? பெரும்பான்மையான இந்துக்களுக்கு நாங்கதான் பாதுகாப்பு என்று சொல்லுது. என்ன செஞ்சாங்க? இந்து மக்களுக்கு வேலை கொடுத்தார்களா? நம் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதற்காக தலைவர் கலைஞர் மாவட்டம் தோறும் அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கட்டினார். ஆனால் அந்த கல்லூரிகளில் நம் சாதாரண சாமானிய இந்துப் பிள்ளைகள் படிக்கக் கூடாது என்பதற்காக நீட் தேர்வை திணிக்கிறார்கள். இது இந்துக்களுக்கு எதிரானது இல்லையா?
கோயில்களை எல்லாம் திமுக இடித்துவிடும் என்று பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். 1330 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்திருப்பவர் நமது முதலமைச்சர். கிராமங்களில் இருக்கும் சின்னச் சின்ன கோயில்களிலும் பூஜை நடைபெற வேண்டும் என்பதற்காக 130 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கும் ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. மகளிர் உரிமைத் தொகை மூலம் ஆயிரம் ரூபாய் பெறுவது பெரும்பான்மை இந்து மக்கள்தானே... ஆனால் பாஜக ஆட்சியில் வருடத்துக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவேன் என்று கூறினார். ஆனால் வேலை கேட்கும்போது பக்கோடா போடுங்கள், அதுவும் வேலைதான் என்கிறார். இந்த ஆட்சி முடிவுக்கு வரவேண்டும். அனைத்து தரப்பினருக்குமான ஆட்சியை ஒன்றியத்தில் உருவாக்க வேண்டும். இவையெல்லாம் நடக்க வேண்டுமானால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். அதற்காக உங்களுக்கு மீண்டும் பணியாற்ற எனக்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டும்” என்றார்.