காய்கறி கடை, டீக்கடையில் முதல்வர் திடீர் விசிட் - மகிழ்ச்சியில் வியாபாரிகள்
ஹாக்கி விளையாடி கொண்டு இருந்த ஒரு சிறுவன் முதல்வரை சாப்பிட்டீங்களா என கேட்டான். அவர் சிரித்துக் கொண்டே சிறுவனை தட்டி கொடுத்தார்.
தஞ்சாவூர்: திருச்சியில் நேற்று வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு தஞ்சையில் தங்கிய முதல்வர் ஸ்டாலின் காலையில் அன்னை சத்யா ஸ்டேடியம் சென்று தஞ்சை தொகுதி வேட்பாளருக்காக வாக்குகள் சேகரித்தார்.
திருச்சி சிறுகானூரில் நேற்று திருச்சி, பெரம்பலூர் தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அவர்களுக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டு தஞ்சைக்கு வந்து சேர்ந்தார். தஞ்சையில் சங்கம் ஹோட்டலில் தங்கிய அவர் காலை தஞ்சை மாநகரில் மக்களைச் சந்தித்து நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் முரசொலிக்கு வாக்குச் சேகரித்தார்.
சத்யா விளையாட்டுத்திடலில் வாக்கு சேகரிப்பு
தஞ்சை சத்யா விளையாட்டுத் திடலில் நடைபயிற்சி மேற்கொண்ட முதல்வர் அங்கு பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த மக்களையும், மாணவர்களையும், சந்தித்தார். முதல்வரை அங்கு கண்ட மக்கள், அவரைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அவருடன் உரையாடும் பொழுது தாங்கள் மகளிருக்கு அளிக்கும் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை குடும்பச் செலவு முதல்கொண்டு அவசரச் செலவுக்குப் பயன்படுகிறது. மிக்க மகிழ்ச்சி என்று தெரிவித்தனர்.
கல்லூரி மாணவ, மாணவிகள் முதல்வரிடம் புதுமைப்பெண் திட்டத்தில் தங்களுக்கு மாதம் 1,000 ரூபாய் அளிப்பது, எங்களுக்கு தன்னம்பிக்கை உணர்வை அளிக்கிறது. இனி கல்லூரி மாணவர்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை அறிவித்துள்ளது மேலும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் கூறி நன்றி தெரிவித்தனர்.
சத்யா விளையாட்டுத் திடலில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது, அங்கு பயிற்சி மேற்கொண்டிருந்த இளைஞர்கள், மாணவ, மாணவிகள், மகளிர் ஆண்கள் எல்லோரும் திரண்டுவந்து மகிழ்ச்சியைத் தெரிவித்ததுடன், முதல்வருடன் கை குலுக்கியும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். அப்போது அவர்களிடம் தஞ்சை நாடாளுமன்ற வேட்பாளர் முரசொலியை அறிமுகப்படுத்தி அவருக்கு வாக்களிக்க முதல்வர் கேட்டுக் கொண்டார்.
காய்கறி சந்தையில் முதல்வர் ஸ்டாலின்
தொடர்ந்து, தஞ்சை நகர் காய்கறிச் சந்தைக்கு நடந்து சென்று காய்கறிக் கடைகளில் காய்களைக் கையில் எடுத்தபடியே விலை நிலவரம் கேட்டறிந்தார். காய்கறி விற்பனையாளர்கள் முதல்வரை பார்த்ததும் மகிழ்ச்சியில் நன்றாக விற்பனையாகிறது என்று தெரிவித்தனர். சில காய்கறிக் கடைக்காரர்கள், செவ்வாழைப்பழம் உள்ளிட்ட பல்வேறு பழங்களைக் முதல்வருக்கு வழங்கினர். அவற்றைப் பெற்றுக் கொண்ட முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
தேநீர் கடையில் முதல்வர் வாக்குசேகரிப்பு
சந்தைப் பகுதியை கடந்து சென்ற முதல்வர் தேநீர் கடைக்குச் சென்று அங்கு தேநீர் பருகி அங்கிருந்த மக்களிடம் பேசி தஞ்சை தொகுதி வேட்பாளர் முரசொலியை அறிமுகப்படுத்தி வாக்களிக்க வேண்டுமாறு கேட்டுக் கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் விவசாய விளை பொருள்களுக்கு அவற்றின் உற்பத்திச் செலவுகளுடன் 50 சதவிகிதம் கூடுதலாக சேர்த்து விலை நிர்ணயிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு 16 விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் முதல்வரை சந்தித்து மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தனர்.இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சை திமுக மத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு சட்டமன்ற உறுப்பினருமான துரை சந்திரசேகரன், எம்.பி. எஸ்.எஸ் பழனிமாணிக்கம், தலைமை செயற்குழு உறுப்பினரும் தஞ்சை எம்எல்ஏவுமான டி.கே.ஜி நீலமேகம், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், தஞ்சை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
முதல்வரிடம் சாப்பிடீங்களா என கேட்ட சிறுவன்
முதல்வர் டீசர்ட், டிராக் பேண்ட் அணிந்து அன்னை சத்யா ஸ்டேடியத்தில் 2 கி.மீ நடைப்பயிற்சி மேற்கொண்டார். ஹாக்கி விளையாடி கொண்டு இருந்த ஒரு சிறுவன் முதல்வரை சாப்பிட்டீங்களா என கேட்டான். அவர் சிரித்துக் கொண்டே சிறுவனை தட்டி கொடுத்தார்.
முதல்வர் ஸ்டாலின் பழைய பேருந்து நிலையம் அருகே டீக்கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார். அவருக்கு வழங்கிய தேநீர் சூடாக இருந்ததால், தஞ்சை எம்எல்ஏ டிகேஜி.நீலமேகம் தேனீரை ஆற்றி, சூடு ஆறிய பின் கொடுத்தார். அதை முதல்வர் ஸ்டாலின் ருசித்து பருகினார். அன்னை சத்யா ஸ்டேடியத்தில் இருந்து காய்கறி சந்தைக்கு செல்ல பெரிய கோவில் வழியை தவிர்த்த முதல்வர் ஸ்டாலின் பழைய கோர்ட் வழியாக ஆற்றுப்பாலம் வந்து அங்கிருந்து காய்கறி மார்க்கெட்டிற்கு சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.