Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை - 6 மணிக்கு மேல் இதெல்லாம் செய்யக்கூடாது..!
lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் பரப்புரை, இன்று மாலையுடன் ஓய்கிறது. 6 மணிக்கு பிறகு செய்யக்கூடாதவை என்னென்ன?
lok Sabha Election 2024: தேர்தல் பரப்புரை முடிந்ததும் மாலை 6 மணிக்கு மேல், தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் அங்கிருந்து வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு:
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளில் முதற்கட்டமாக நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதோடு, விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைதேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் நிறைவடைந்து, தேசிய, மாநில கட்சியினர் ஒவ்வொரு தொகுதியிலும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர். பிரதமர், முதலமைச்சர் தொடங்கி நட்சத்திர பேச்சாளர்கள் என பல்வேறு தரப்பினரும், பட்டிதொட்டி எங்கும் முழங்கினர். எதிர்க்கட்சிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன மாதிரியான நலத்திட்டங்களை முன்னெடுப்போம் என்பன போன்ற வாக்குறுதிகளை கூறியும் வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தனர். தெருத்தெருவாக மற்றும் வீடு வீடாக சென்றும், பஜ்ஜி சுட்டு கொடுப்பது, டீ போட்டு கொடுப்பது என்பன போன்ற பல்வேறு நூதன முறைகளிலும் வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.
6 மணிக்கு மேல் அமலுக்கு வரும் உத்தரவுகள்:
- தேர்தல் பரப்புரை முடிந்ததும் மாலை 6 மணிக்கு மேல் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும்.
- அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் எக்காரணத்தை கொண்டும் பரப்புரை செய்யவோ, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியிலோ ஈடுபட அனுமதி இல்லை.
- இந்த பணிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
களத்தில் 950 வேட்பாளர்கள்:
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. பிரதான கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சுயேச்சைகள் என, மொத்தம் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் ஆண் வேட்பாளர்கள் 873 பேரும், பெண் வேட்பாளர்கள் 77 பேரும் அடங்குவர். வடசென்னையில் 35 வேட்பாளர்களும், தென்சென்னையில் 41, மத்திய சென்னையில் 31, திருவள்ளூர் 14, காஞ்சிபுரம் 11, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 31 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதிகப்பட்சமாக கரூர் தொகுதியில் 54 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 9 பேரும் போட்டியிடுகிறார்கள். விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் 10 பேர் களத்தில் உள்ளனர். இதில் 6 பேர் ஆண்கள், பெண்கள் 4 பேர்.
வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்:
வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 1,59,100 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 82,014 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 88,783 விவிபேட் இயந்திரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 100 சதவிகித வாக்குப்பதிவை உறுதி செய்ய, வரும் 19ம் தேதியன்று பொது விடுமுறையும் அறிவிக்கப்படுள்ளது. ஊழியர்கள் வாக்களிக்க வசதியாக விடுமுறை அறிவிக்காவிட்டால் அந்தந்த மாவட்ட எஸ்டிடி கோட் சேர்த்து 1950 என்ற தொலைபேசியில் புகார் அளிக்கலாம்.