(Source: ECI/ABP News/ABP Majha)
Local Body Election 2022 | ’உள்ளாட்சித் தேர்தலில் தில்லுமுல்லு செய்து திமுக வெற்றிபெற முயற்சிக்கிறது’- எஸ்.பி.வேலுமணி
”திமுக தில்லுமுல்லு செய்து வெற்றி பெற முயற்சிக்கிறது.தேர்தல் ஆணையம் கவனத்தில்கொண்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு முறையாக தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்”
கோவை மாவட்டத்தில் இன்று ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 802 பதவிகளுக்கு 3 ஆயிரத்து 366 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் மொத்தம் 23 இலட்சத்து 88 ஆயிரத்து 263 பேர் வாக்களிக்க உள்ளனர். 2303 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 424 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. காலை முதல் பொது மக்கள் ஆர்வத்துடன் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 92 வது வார்டான சுகுணாபுரம் பகுதியில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தனது வாக்கினை பதிவு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “கோவை மாவட்டத்தை பொறுத்த வரை ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மிகப்பெரிய வளர்ச்சியை தந்துள்ளனர். 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை தந்துள்ளனர். அதனால் கோவை மாவட்ட மக்கள் முழுமையாக அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும் அதிமுகவிற்கு வெற்றியை தந்தார்கள். அதனால் தான் எப்படியாவது, எதாவது செய்து வெற்றி பெற திமுக முயற்சிக்கிறது. திமுக தில்லுமுல்லு செய்து வெற்றி பெற முயற்சிக்கிறது. நேற்று கோவைக்கு கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தாலும், தோல்வி பயத்தால் வெளியூர்காரர்கள் வடவள்ளி, காளப்பட்டி உள்ளிட்ட சில இடங்களில் இன்னும் இருக்கின்றனர். அவர்களுக்கு காவல் துறையினர் உடந்தையாக உள்ளனர். இதனை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு முறையாக தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை மாநகராட்சி மேயர் பதவியை அதிமுக கைப்பற்றும். பல திட்டங்களை தந்து கோவை மாவட்டத்தை மாற்றி அமைத்துள்ளோம். அதேபோல நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி பெறும். நேற்று முன் தினம் மாலை 6 மணிக்குள் வெளியூர்காரர்களை வெளியேற்றததால் தான், நேற்று போராட்டம் நடத்தி கைதானோம். வெளியூர்காரர்கள் இன்னும் கோவையில் உள்ளனர். தேர்தல் முடிந்த பின்னால் அதிமுக வெற்றி பெற்றாலும், திமுக வெற்றி பெற்றதாக அதிகாரிகள் உடந்தையுடன் அறிவிக்க திட்டமிட்டுள்ளனர். விதிமீறலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது தனிப்பட்ட முறையில் நடவடிக்கைக எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. தேர்தல் சரியாக நடத்த வேண்டும் என்பது தான் எங்களின் கோரிக்கை” என அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்