Erode East ByPoll: சூடுபிடிக்கும் ஈரோடு இடைத்தேர்தல்..! 1 மணி வரை வாக்குப்பதிவு நிலவரம் என்ன?
Erode East By Election 2023 Voter Turnout: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பகல் ஒரு மணி வரை 44.56 % வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைய உள்ளது.
இத்தொகுதியில் ஆண்களைவிட பெண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2000 பெண்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர். தற்போது வரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 238 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்
வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி வரையில் 10.10% வாக்குபதிவாகியுள்ளனர். அதாவது 22,973 பேர் வாக்கு செலுத்தியுள்ளனர்.
காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்
32, 562 ஆண்களும், 30,907 பெண்களும் வாக்களித்தனர். இதையடுத்து மொத்தம் 63,469 பேர் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். 27.89% வாக்குகள் பதிவாகியிருந்தன.
ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தமுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 2,27,547 ஆகும்.
கடந்த ஜனவரி, 4- ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வே.ரா உடல்நலக்குறைவாக உயிரிழந்தார். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதனையடுத்து ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.,வான தென்னரசுவும், தேமுதிக சார்பில் ஆனந்தும், நாம் தமிழர் சார்பில் மேனகாவும் போட்டியிட்டுள்ளனர். மொத்தம் சுயேட்சை வேட்பாளர்கள் சேர்த்து 77 வேட்பாளர்கள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களத்தில் உள்ளனர்.
களைக்கட்டிய பிரச்சாரம்
இதற்கிடையில் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் கடந்த ஒரு மாத காலமாகவே தீவிரமாக நடைபெற்றது. திரும்பும் இடமெல்லாம் அரசியல் கட்சிகள் போட்டிப்போட்டுக் கொண்டு பிரச்சாரம் செய்தனர். வீட்டுக்கு வெள்ளை அடிப்பது தொடங்கி பாத்திரம் கழுவுவது வரை வித்தியாசமான ஸ்டைலில் கட்சியினர் ஓட்டு சேகரித்து வந்தனர். வெள்ளிக்கிழமையுடன் தேர்தல் பரப்புரை நிறைவடந்தது. இந்நிலையில், ஈரோட்டில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிவர இயங்கவில்லை. வாக்குபதிவு மையங்களில் கட்சிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
தள்ளுமுள்ளு:
இந்நிலையில், பெரியண்ணா வீதியில் உள்ள கலைமகள் பள்ளி வாக்குச் சாவடியில் இருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு வீட்டில், வாக்காளர்களை திமுகவினர் அடைத்து வைத்து அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கி வருவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், காவல் துறையினருடன் அந்த வீட்டிற்கு வந்த அதிமுகவினர் அங்கிருந்த திமுகவினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இது தள்ளு - முள்ளுவாக மாறிய நிலையில், காவல் துறையினர் திமுக மற்றும் அதிமுகவினரை விலக்கினர். மேலும், இங்கு ஏன் அனைவரும் கூடியுள்ளீர்கள் என்ற கேள்விக்கு ”நாங்கள் அனைவரும் உறவினர்கள், சந்திக்க வந்துள்ளோம்” என கூறியுள்ளனர்.
பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறியப்பட்ட 34 மையங்களில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடைத்தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு என ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்
மேலும் வாசிக்க..