Coimbatore Election Results 2022| கோவை கோட்டையை பறிகொடுத்த அதிமுக - 20 மாநகராட்சி வார்டுகளில் டெப்பாசிட் இழந்தது
அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கோவை மாநகராட்சியில், ஒற்றை இலக்கத்திற்குள் சுருங்கி படுதோல்வியை சந்தித்துள்ளது. வெறும் 3 வார்டுகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றதால், எதிர்கட்சி அந்தஸ்தையும் இழந்தது.
கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 7 நகராட்சிகளையும், 31 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. கோவை மாநகராட்சியையும் திமுக பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்றியது. கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 வார்டுகளை கைப்பற்றி அசத்தியது. திமுக 73 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 5 வார்டுகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 வார்டுகளில் வென்றுள்ளது. போட்டியிட்ட 3 இடங்களிலும் மதிமுகவும், போட்டியிட்ட 2 இடங்களிலும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. மனிதநேய மக்கள் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சியினர் உடன் சேர்த்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 76 பேர் வெற்றி பெற்றுள்ளனர். சுயேச்சையாக களமிறங்கிய எஸ்டிபிஐ ஒரு இடத்தில் வென்றது.
அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கோவை மாநகராட்சியில், ஒற்றை இலக்கத்திற்குள் சுருங்கி படுதோல்வியை சந்தித்துள்ளது. வெறும் 3 வார்டுகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றதால், எதிர்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சொந்த வார்டான 92 வது வார்டிலும் அதிமுக தோல்வி அடைந்தது. அந்த வார்டில் திமுக வேட்பாளர் வெற்றிசெல்வன் 456 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக மேயர் வேட்பாளராக அறியப்பட்ட கிருபாலினி கார்த்திகேயன் 7 வது வார்டில் தோல்வி அடைந்தார்.
கோவை மாநகராட்சியில் அதிமுக 99 வார்டுகளிலும், அதன் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு வார்டிலும் போட்டியிட்டன. இதில் வெறும் 3 வார்டுகளில் மட்டும் அதிமுக வெற்றி பெற்று, 97 வார்டுகளில் தோல்வியை தழுவியது. அதிலும் 20 வார்டுகளில் அதிமுக டெபாசிட் இழந்து இருப்பது அக்கட்சியினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2011 மாநகராட்சித் தேர்தலில் 78 இடங்களிலும், கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளை வென்ற அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு முன்பு 3 முறை கோவை மாநகராட்சி மேயர் பதவியை அதிமுக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை மாநகராட்சி தேர்தல் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுகும் தேர்தல் போட்டியாக மட்டுமில்லாமல், கெளரவப் பிரச்சனையாக இருந்தது. கோவை அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டுமென அதிமுகவினரும், சட்டமன்ற தேர்தல் படுதோல்விக்கு பழிதீர்க்க வேண்டுமென திமுகவினரும் தேர்தல் பணியாற்றினர். இதனால் கோவை மாநகராட்சியை கைப்பற்றுவதில் கடும் இழுபறி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இந்த தேர்தல் வெற்றி மூலம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தேர்தல் களத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீழ்த்தியுள்ளார்.