ABP-C Voter Opinion Poll: மக்களவைத் தேர்தலில் வெல்லப்போவது யார்? ABP நியூஸ் - சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள்
ABP-C Voter Opinion Poll: 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தல் தொடர்பாக ஏபிபி செய்தி நிறுவனமும் சி வோட்டரும் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் தொடர்பாக, ஏபிபி நியூஸ் மற்றும் சி வோட்டர் இணைந்து, தேர்தலுக்கு முந்தைய முதல்கட்ட கருத்துக்கணிப்பை நடத்தியது. இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகளின் அடிப்படையில், பிரதமர் வேட்பாளர், எந்தக் கட்சிக்கு எங்கு வாய்ப்பு, பல்வேறு பிரச்சினைகளில் மக்களின் மனவோட்டம் என்ன? என்பது உள்ளிட்ட விடயங்களில் பல புதிய கோணங்கள் கருத்து கணிப்பு முடிவுகளில் வெளியாகியுள்ளன.
ஏபிபி - சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், பா.ஜ.க. கூட்டணி 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பின்படி, மக்களவையில் உள்ள 543 தொகுதிகளில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 295 முதல் 335 இடங்கள் வரை வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது. காங்கிரஸ், தி.மு.க. ஆகிய கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 165 முதல் 205 இடங்கள் வரை வெல்வதற்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிகிறது. மேலும், இதர கட்சிகள் 35 முதல் 65 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும் கணிப்பில் தெரியவந்துள்ளது.
மண்டல வாரியாக பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி கிழக்கு மண்டலத்தில் மொத்தம் உள்ள 153 தொகுதிகளில் 80 முதல் 90 தொகுதிகளையும், வடக்கு மண்டலத்தில் உள்ள 180 தொகுதிகளில் 150 முதல் 160 தொகுதிகளையும், மேற்கு மண்டலத்தில் 78 தொகுதிகளில் 45 முதல் 55 தொகுதிகளையும், தெற்கு மண்டலத்தில் மொத்தம் உள்ள 132 தொகுதிகளில் 20 முதல் 30 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பில் வெளியாகியுள்ளது.
இந்தியா கூட்டணியை பொறுத்தமட்டில் தெற்கு மண்டலத்தில் பலமாக உள்ளனர். அங்கு அவர்கள் 70 முதல் 80 தொகுதிகளை கைப்பற்றுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. கிழக்கு மண்டலத்தில் 50 முதல் 60 தொகுதிகளையும், வடக்கு மண்டலத்தில் 20 முதல் 30 தொகுதிகளையும், மேற்கு மண்டலத்தில் 25 முதல் 35 தொகுதிகளையும் கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க. ஆட்சி செய்யும் மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.விற்கு 58 சதவீத வாக்குகளும், ( 27 முதல் 29 தொகுதிகள்) காங்கிரசுக்கு 36 சதவீத வாக்குகளும் (0 முதல் 2 தொகுதிகள் வரை), இதர கட்சிகளுக்கு 6 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க.விற்கு 55 சதவீத வாக்குகளும் ( 9 முதல் 11 தொகுதிகளும்), காங்கிரஸ் கட்சிக்கு 37 சதவீத வாக்குகளும் ( 0 முதல் 2 தொகுதிகளும்) இதர கட்சிகள் 8 சதவீத வாக்குகளும் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் பா.ஜ.க. 57 சதவீத வாக்குகளும் (23 முதல் 25 தொகுதிகளும்) காங்கிரஸ் கட்சி 34 சதவீத வாக்குகளும் ( 0 முதல் 2 தொகுதிகளும்) இதர கட்சிகள் 9 சதவீத வாக்குகளும் கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
அண்மையில், காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ள தெலங்கானாவில் பா.ஜ.க. 21 சதவீத வாக்குகளும் ( 1 முதல் 3 தொகுதிகளும்), காங்கிரஸ் கட்சி 38 சதவீத வாக்குகளும் ( 9 முதல் 11 தொகுதிகளும்), பி.ஆர்.எஸ். கட்சி 33 சதவீத வாக்குகளும் ( 3 முதல் 5 தொகுதிகளும்) இதர கட்சிகள் 8 சதவீத வாக்குகள் ( 1 முதல் 2 தொகுதிகள்) கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் பா.ஜ.க. கூட்டணி 52 சதவீத வாக்குகள் ( 22 முதல் 24 தொகுதிகளும்) காங்கிரஸ் 43 சதவீத வாக்குகள் ( 4 முதல் 6 தொகுதிகளும்) இதர கட்சிகள் 5 சதவீத வாக்குகளும் பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. கூட்டணி 39 சதவீத வாக்குகளும் ( 16 தொகுதி முதல் 18 தொகுதிகள்), காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணி 8 சதவீத வாக்குகள் (0 முதல் 2 தொகுதிகள்), திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 44 சதவீத வாக்குகள் ( 23 முதல் 25 தொகுதிகள் வரை) இதர கட்சிகள் 9 சதவீத வாக்குகளும் வாங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இன்னமும், திருணாமூல், காங்கிரஸ் இடையே கூட்டணி தொடர்பாக பேச்சு நடைபெறுவதால், தனித்துப் போட்டியிடுவதாக வைத்து கேள்விகள் கேட்கப்பட்டன.
பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. கூட்டணி 49 சதவீத வாக்குகளும் ( 73 முதல் 75 தொகுதிகளும்), காங்கிரஸ், சமாஜ்வாதி கூட்டணி 35 சதவீத வாக்குகளும் ( 4 முதல் 6 தொகுதிகளும்) பகுஜன் சமாஜ்வாதி கட்சி 5 சதவீத வாக்குகளும் ( 0 முதல் 2 தொகுதிகளும்) இதர கட்சிகள் 11 சதவீத வாக்குகளும் வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜ.க. 16 சதவீத வாக்குகளும் ( 0 முதல் 2 தொகுதிகளும்) காங்கிரஸ் கட்சி 27 சதவீத வாக்குகளும் ( 5 முதல் 7 தொகுதிகளும்) ஆம் ஆத்மி கட்சி 25 சதவீத வாக்குகளும் ( 4 முதல் 6 தொகுதிகளும்) எஸ்.ஏ.டி. கட்சி 14 சதவீத வாக்குகளும் ( 0 முதல் 2 தொகுதிகளும்) கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் என்.டி.ஏ. கூட்டணி 39 சதவீத வாக்குகளும் ( 16 முதல் 18 தொகுதிகளும்) யு.பி.ஏ. கூட்டணி 43 சதவீத வாக்குகளும் ( 21 முதல் 23 தொகுதிகளும்) இதர கட்சிகள் 18 சதவீத வாக்குகளும் ( 0 முதல் 2 தொகுதிகளும்) கைப்பற்றுவார்கள் என்று தெரியவந்துள்ளது. மகாராஷ்ட்ராவில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 37 சதவீத வாக்குகளும் 19 முதல் 21 தொகுதிகள்) காங்கிரஸ் உள்ளடக்கிய எம்.வி.ஏ. கூட்டணி 41 சதவீத வாக்குகளும் ( 26 முதல் 28 தொகுதிகள்), இதர கட்சிகள் 22 சதவீத வாக்குகளும் ( 0 முதல் 2 தொகுதிகள்) கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி தெலங்கானா ( 9 முதல் 11 தொகுதிகள்), பஞ்சாப் ( 5 முதல் 7 தொகுதிகள்) பீகார் ( 21 முதல் 23 தொகுதிகள்) மற்றும் மகாராஷ்ட்ரா ( 26 முதல் 28 தொகுதிகள்) கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் இந்தியா கூட்டணிக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதால், தனித்துப்போட்டியிட்டால், திரிணாமுதல் காங்கிரஸ் 23 முதல் 25 தொகுதிகள் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கேட்கப்பட்ட கேள்விகள்:
543 மக்களவை தொகுதிகளிலும் உள்ள 13 ஆயிரத்து 115 நபர்களிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கருத்துக்கணிப்பின் போது, பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்டன. அதில், பிரதமராக நரேந்திர மோடியை மீண்டும் தேர்வு செய்ய 58.6 சதவீத என விருப்பம் தெரிவித்துள்ளனர். ராகுல்காந்தியா? நரேந்திர மோடியா? என்ற கேள்வியில் மக்களின் விருப்பமாக நரேந்திர மோடி உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ராகுல்காந்தி பிரதமர் ஆக வேண்டுமென்று 32 சதவீத மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் இல்லை என்று 4.4 சதவீதம் பேரும், 5 சதவீதம் நபர்கள் சொல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். இதில், தமிழ்நாடு, கேரள, பஞ்சாப் மாநிலங்களில் மற்றும் புதுச்சேரியில் மோடியை காட்டிலும் ராகுல்காந்தியே பிரதமர் ஆக வேண்டும் என்று அதிகம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியின் செயல்பாடு மிகவும் திருப்திகரமாக இருப்பதாக 47.2 சதவீதம் பேரும், 30.2 சதவீதம் பேர் ஓரளவு திருப்தி என்றும், 21.3 சதவீதம் பேர் திருப்தியில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
நகர்ப்புறம், கிராமப்புறம் என அனைத்து இடங்களிலும் வேலைவாய்ப்பின்மை 2024ம் ஆண்டு மக்கவைத் தேர்தலில் முக்கிய பிரச்சினையாக பேசப்படும் என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
அதேபோன்று, சாதிய கணக்கெடுப்பு பெரிய தாக்கத்தைத் தேர்தலில் ஏற்படுத்தாது என்றும் எதிர்க்கட்சிகளுக்கு பெரிய அளவு இந்த வாக்குறுதி உதவாது என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
கர்நாடகாவில் மதச் சார்பற்ற ஜனதா தளத்துடன் பா.ஜ.க. கூட்டணி வைத்துத் தேர்தலைச் சந்திப்பார்கள் என்றும் அது காங்கிரஸுக்கு பெரும் தலைவலியாக அமையும் என்றும் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.
இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளருக்கு பெரும்பாலானோர் தேர்வாக ராகுல் காந்தியே உள்ளார். அவர் நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி மற்றும் அர்விந்த் கெஜ்ரிவாலை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
இந்த கருத்துக்கணிப்பில் 2024ம் ஆண்டு தேர்தல் வரை இந்தியா கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் இருக்க மாட்டார்கள் என்றும் தெரிய வந்துள்ளது. அதேபோன்று, இந்த மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய முதற்கட்ட கருத்துக் கணிப்பில், மத்திய அரசின் பணி மிகவும் திருப்திகரமாக இருப்பதாக 37.6 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
இன்றைய இந்தியாவின் நிலை எப்படி? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு 45.1 சதவீதம் பேர் நாடும், அவர்களது வாழ்க்கையும் முன்னோக்கி செல்வதாகவும், 25.3 சதவீதம் பேர் நாடு முன்னேறி சென்றாலும் அவர்களது வாழ்க்கை முன்னேறவில்லை என்றும், 22.4 சதவீதம் பேர் நாடும், அவர்களது வாழ்க்கையும் ஏழ்மையான நிலையிலே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
கருத்துக் கணிப்பு நடத்தப்பட்ட முறை:
சி வோட்டர் கருத்துக்கணிப்பு CATI (கணினி உதவியுடன் கூடிய ஃபோன் நேர்காணல்) நேர்காணல்களில், கருத்துக்கணிப்பும் அதன் மூலம் பெறப்பட்ட கணிப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களிடம் நடத்தப்பட்டது.
கருத்துக்கணிப்பு தேதி: 15 டிசம்பர் to 21 டிசம்பர், 2023
மாதிரி அளவு : 13,115
மொத்த சீட்டுகள் : 543
பிழை மார்ஜின்: +_/_- 5%
நம்பிக்கை: 95%
ஏபிபி குழுமம்:
புத்தாக்க ஊடகமும், பல்தரப்பட்ட எழுத்துக்களின் சங்கமமுமாக, ஏபிபி நெட்வொர்க் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உலகில் நம்பகமான இடத்தைப் பிடித்துள்ளது. பல்வேறு மொழிகளில் இயங்கும் இவ்வூடகம், 535 மில்லியன் மக்களை சென்றடைந்துள்ளது. ஏபிபி க்ரியேஷன்ஸ் எனப்படும் குடைக்குக் கீழ் வரும் ஏபிபி ஸ்டூடியோஸ் - இந்த நெட்வோர்க்கின் உள்ளடக்க புத்தாக்கத்தின் தூணாக உள்ளது. உருவாக்கம், தயாரிப்பு, அசல் உள்ளடக்கம், செய்திக்கு அப்பாற்பட்ட புது கோணங்கள் ஆகியவற்றை வெளியிடுகிறது. ஏபிபி குழுமம் தொடங்கிய 100 ஆண்டுகள் ஆன நிலையில், இந்திய ஊடக களத்தில் தொடர்ச்சியாக ஊடக உலகில் தனது தனித்துவமான தடத்தை பதித்து, முன்னணி ஊடகமாக இருந்து வருகிறது.